தமிழ் சினிமாவில் விஜய் இடத்தில் அடுத்தது சிவகார்த்திகேயன்தான் என்று சொல்லும் அளவுக்கு முன்னணி நடிகராக மாறியவர். ஆனால் விஜய் இடத்துக்கு நான் எல்லாம் வர நினைப்பது தவறு என்று நேற்று திருச்சியில் நடந்த விழாவில் அவரே பேசி இருக்கிறார். ஆனால் விஜய் இடத்துக்கு வர சிம்பு, தனுஷ், சூர்யா, விஜய் சேதுபதி போன்றவர்கள் அதிக ஆர்வம் காட்டுவதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அயலான் படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் அமரன். இந்த படத்திற்கு முதன்முறையாக ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது இதுவரை 20க்கும் மேற்பட்ட படங்களில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள நிலையில், அவரது அமரன் படத்துக்குதான் முதல்முறையாக ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி உள்ள அமரன் படம் வருகிற அக்டோபர் 31ம் தேதி தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார். சாய்பல்லவி கதாநாயகியாக நடித்துள்ளார். நடிகர் கமல்ஹாசனின் சொந்த பட தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.
பயங்கரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாறுதான் அமரன் படமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் பிரமோஷன் பணிகளை துவங்கியுள்ள அமரன் படக் குழு பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகிறது. தற்போது மலேசியாவில் நடந்த ப்ரமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றனர்.
அந்நிகழ்ச்சியில், வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு நீங்கள் சொல்லும் அறிவுரை என்ன என்று நிகழ்ச்சி தொகுப்பாளர் கேட்ட கேள்விக்கு, சிவகார்த்திகேயன் பதில் கூறியதாவது, நான் முதலில் பெரிய தன்னம்பிக்கை கொண்டவன் இல்லை. ரொம்பவும் பயப்படுவேன். முதல்முறையாக மேடையில் ஏறும் போது ரொம்பவும் பயமாக இருந்தது. பயத்தில் கை நடுங்கும்.
ஆனாலும் எனக்குள் ஒரு ஆசை மட்டும் இருந்தது. எந்த ஒரு விஷயத்தையும் கொஞ்சம் சரியாக பண்ணினால் போதும், தமிழ் மக்கள்கிட்ட நான் பார்த்து பிடித்து வியந்து பார்க்கிற விஷயம் இதுதான். கொஞ்சம் முயற்சி பண்ணினால் போதும், அவர்களை கைதட்டி நம்மளை மேல தூக்கி விட்டுடுவாங்க, என்று சிவகார்த்திகேயன் கூறி இருக்கிறார். மேலும் இந்த விழாவில் ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க நடிகர் கமல்ஹாசன் போல் அவரது குரலில் பேசியும் ரசிகர்களை அசத்தியிருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன்.





