தமிழ் சினிமாவில் நீண்ட காலமாக நல்ல கதைகளுக்கு தான் பஞ்சம் நீடிக்கிறது. கையில் வாள் இல்லாமல், போர்க்களத்துக்கு சென்ற வீரன் போல கதையே இல்லாமல், ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வரும் இயக்குனர்கள் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே இருக்கின்றனர். பழைய ஹாலிவுட், மலையாளம், இந்தி, கன்னட படங்களை பார்த்து, அதில் இருந்து கதைகளை உருவி உருவாக்குகின்றனர்.
பெரிய நடிகர்களின் கால்ஷீட் கிடைத்து விட்டால் போதும், அவர்களுக்கான ஒரு மசாலா கதையை, பழைய படங்களில் இருந்து காப்பியடித்து அப்படியே பட்டி, டிங்கிரிங் பார்த்து புது பெயிண்ட் அடித்து, சினிமா மார்க்கெட்டில் புது சரக்காக இறக்குமதி செய்கின்றனர். ரசிகர்களும் தங்களது அபிமான நடிகர் நடித்த படம் என, 500 கோடி 600 கோடி ரூபாய் வசூலிக்க செய்து விடுகின்றனர்.
இப்படி கதை பஞ்சம்தான் தமிழ் சினிமாவில் தலை விரித்தாடுகிறது என்றால், டைட்டில் பஞ்சம் அதைவிட மோசமாக இருக்கிறது. ரஜினி நடிக்கிற படத்துக்கு கூலி என பெயர் வைத்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ். கூலி என்ற பெயரில் தமிழில் சரத்குமார், மீனா நடித்து பி வாசு இயக்கிய படம் ஏற்கனவே வந்துவிட்டது. இந்தியிலும் அமிதாப் பச்சன் கூலி என்ற படத்தில் நடித்து விட்டார்.
இப்போது மற்றொரு சர்ச்சையாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில், லவ்டுடே நாயகன் பிரதீப் ரங்கநாதன் நடித்த படத்துக்கு எல்ஐசி என பெயர் வைத்தனர். ஆயுள் காப்பீட்டு கழகம் என்ற பொதுத்துறை நிறுவனத்தின் எல்ஐசி பெயரை பயன்படுத்த கூடாது என, அந்நிறுவனம் நோட்டீஸ் அனுப்பியும் அதை விக்னேஷ் சிவன் கண்டுகொள்ளவில்லை. எல்ஐசி என்றால் லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேசன் என்றும் விளக்கம் கொடுத்திருந்தார்.
லியோ படத்தை செவன்த் ஸ்கிரீன்ஸ் ஸ்டுடியோ எஸ்எஸ் லலித்குமார்தான் எல்ஐசி படத்தை தயாரித்தார். படப்பிடிப்பு முடிவடையும் தருவாயில் உள்ளது. இதற்கிடையே படத்தின் இயக்குனருக்கும், ஹீரோவுக்கும் இடையில் ஏகப்பட்ட பஞ்சாயத்துகள் ஓடியதாகவும், விக்கி எடுக்கும் காட்சிகளில், பிரதீப் ரங்கநாதன் குறுக்கீடுகள் செய்ததாகவும் புகார்கள் எழுந்தன.
இதற்கிடையே, எங்களது நிறுவனத்தின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக, இந்த படத்துக்கு எல்ஐசி என பெயர் வைத்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எல்ஐசி நிறுவனம் எச்சரித்ததை தொடர்ந்து, படத்துக்கு எல்ஐகே என பெயர் மாற்றம் செய்திருக்கிறார் டைரக்டர் விக்னேஷ் சிவன். லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என்ற விரிவாக்கத்துடன் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளார். இதில் இதயம் செய்வதை எந்திரம் செய்யாது என்ற பொன்மொழியும் காணப்படுகிறது.





