நடிகர் விஷால், தமிழ் சினிமாவில் மிகவும் கவனிக்கப்பட்ட ஒரு முன்னணி நடிகராக இருந்தவர். அவரது நடிப்பில் வெளியான திமிரு, சண்டக்கோழி, துப்பறிவாளன், அவன் இவன், பாண்டியநாடு உள்ளிட்ட படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. ஆனால் கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து தோல்வி படங்களை தந்து வருகிறார்.
கடந்தாண்டில் வெளியான மார்க் ஆண்டனி விஷாலுக்கு கம்பேக் படமாக அமைந்தது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய இந்த படம் ரூ. 100 கோடிக்கு மேல் வசூலித்தது. இந்தியிலும் வெளியானது. ஆனால் அதற்கு பிறகு ஹரி இயக்கத்தில் வெளியான ரத்னம் படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது.
கடந்த சில மாதங்களாக துப்பறிவாளன் 2 படத்தை விஷாலே இயக்கி நடிப்பதாக அறிவித்து, அதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டார். லண்டன் சென்று ஷூட்டிங் லொகேஷனும் பார்த்து வந்தார். ஆனால் அந்த படத்தை தயாரிக்க தயாரிப்பாளர் யாரும் முன்வரவில்லை. ஒரு கட்டத்தில் வெறுத்துப்போன விஷால், துப்பறிவாளன் 2 படத்தையே டிராப் செய்துவிட்டார்.
இதற்கிடையே அடிக்கடி ஏதேனும் சில சர்ச்சைகளில் விஷால் சிக்கிக்கொள்வது வழக்கமாக உள்ளது. அவர் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராக இருந்த 2027-19ம் ஆண்டு காலகட்டத்தில் ரூ. 12 கோடியை செலவு செய்த விவகாரத்தில் தயாரிப்பாளர் சங்கம் அவர் மீது குற்றச்சாட்டு எழுப்பியுள்ளது. அவரது படங்களுக்கு ரெட் கார்டு விதித்துள்ளது.
இந்நிலையில், நடிகர் விஷால் சமீபத்தில் கேரளம் மாநிலம் வயநாடு நிலச்சரிவு சம்பவம் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் விஷால் கூறியிருப்பதாவது, நிம்மதியற்ற இரவுகள் கடந்து சென்றுக்கொண்டு இருக்கின்றன. இயற்கையின் முன்பு மனிதர்களால் எதுவும் செய்ய முடியாது. ஆனால் இந்த துன்பமான நிகழ்வை ஏற்க மனம் மறுக்கிறது.
சாதிமத பேதமின்றி, அனைவரும் ஒற்றுமையாக ஒன்பட்டு நின்று நிர்கதியில் தவிக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டும். இந்த துன்பமான நிகழ்வில், தன் உயிரை துச்சமாக கருதி, மக்களை காக்க போராடி வருபவர்களுக்கு நன்றி சொல்ல நான் கடமைப்பட்டுள்ளேன். இந்த துயர சம்பவத்தை வீண் அரசியலாக்காமல், மக்களுக்கு உதவும் வகையில் ஆக்கப்பூர்வமான செயல் திட்டங்களை தீட்டுமாறு மத்திய, மாநில அரசுகளை கேட்டுக்கொள்கிறேன், என அந்த பதிவில் நடிகர் விஷால் கூறியிருக்கிறார்.





