தமிழ் சினிமாவில் எப்போதாவது தான் சில ஆச்சரியங்கள் நடக்கும். அப்படி ஒரு ஆச்சரியம் தான் தற்போது பொங்கல் பண்டிகைக்கு நிகழ்ந்திருக்கிறது. 13 ஆண்டுகளாக திரைக்கு வராமல் முடங்கி கிடந்த விஷாலின் மதகஜ ராஜா திரைப்படம், திரையரங்குகளில் வெளியாகி சக்கை போடு போட்டு வருகிறது.
கமர்சியல் திரைப்படங்களை எடுப்பதில் கிங் ஆன சுந்தர் சி தான் இந்த திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். அஞ்சலி வரலட்சுமி சரத்குமார் சந்தானம் மனோபாலா உள்ளிட்ட ஏராளமானோர் இந்த திரைப்படத்தில் நடித்திருக்கிறார்கள். ஜெமினி ஃபிலிம்ஸ் சர்க்யூட் நிறுவனம் தயாரித்த இந்த திரைப்படம், 2013 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது.
பிறகு பல்வேறு பிரச்சினை காரணமாக அந்த திரைப்படம் வெளியாகாமல் முடங்கிப் போய்விட்டது. இனி இது அவ்வளவுதான் என்று பலரும் கூறிக் கொண்டிருந்த சமயத்தில்தான், நாள் பார்த்து காய்களை நகர்த்தி இருக்கிறார் சுந்தர் சி. பொங்கல் ரேசில் இருந்து விடாமுயற்சி திரைப்படம் பின்வாங்க, அடுக்கடுக்கான திரைப்படங்களின் அறிவிப்புகள் வெளியாகின.
அதில் பலரது எதிர்பார்ப்பையும் தூண்டிய திரைப்படம் தான் மதகஜராஜா. எல்லோரும் நினைத்தது போல், காமெடிக்கு அதிக முக்கியத்துவத்தை கொடுத்து கலக்கி இருக்கிறார் சுந்தர் சி. அதிலும் படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள், ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைப்பதால் மதகஜராஜா திரைப்படம் வசூல்மேல் வசூல் குவித்து வருகிறது.
குறிப்பாக சந்தானத்தின் காமெடிகள் சரவெடியாய் வெடித்து சிதறுவதாக ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். 100 கோடி வசூல் என்ற இலக்கை நோக்கி அந்த திரைப்படம் பயணித்துக் கொண்டிருக்க, மதகஜராஜாவின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குனர் சுந்தர் சி விஷால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய நடிகர் விஷால், நிறைய வெற்றி திரைப்படங்களுக்கு தூணாக சந்தானம் இருந்திருக்கிறார். விண்டேஜ் சந்தானத்தின் காமெடியை பலரும் இங்கு மிஸ் செய்கிறார்கள். மதகஜராஜா திரைப்படத்தின் இரண்டாவது ஹீரோ அவர்தான். அவர் வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு காமெடி திரைப்படங்களிலாவது நடிக்க வேண்டும். நான் அடுத்ததாக கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிக்கிறேன். பிறகு துப்பறிவாளன் படத்தின் இரண்டாம் பாகமும் வருகிறது. அடுத்ததாக அஜய் ஞானமுத்து படத்தில் நடிக்க உள்ளேன். சுந்தர் சி சாரிடமிருந்து எப்போது அழைப்பு வந்தாலும் இவை அனைத்தையும் தூக்கிப்போட்டு விட்டு அங்கு செல்லவும் தயாராக இருக்கிறேன். இதுபோக ஆம்பள திரைப்படத்தை மீண்டும் ரீ ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளோம் என்று கூறி இருக்கிறார்.





