லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான திரைப்படம் “கைதி”. இத்திரைப்படத்தை எஸ்.ஆர்.பிரபு தயாரித்திருந்தார். இத்திரைப்படம் கார்த்தியின் கெரியரில் மிக முக்கியமான வெற்றி திரைப்படமாக அமைந்தது. இத்திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து “கைதி 2” திரைப்படத்தை படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர்.

ஆனால் லோகேஷ் கனகராஜ் “கைதி” திரைப்படத்தை தொடர்ந்து “மாஸ்டர்”, “விக்ரம்”, “லியோ” ஆகிய புராஜெக்ட்டுகளில் அடுத்தடுத்து பிசியாக ஆனதால் “கைதி 2” புராஜெக்ட் தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது.
இந்த நிலையில் சமீபத்தில் லோகேஷ் கனகராஜும் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவும் தற்செயலாக சந்தித்தார்களாம். அப்போது லோகேஷ் கனகராஜ், எஸ்.ஆர்.பிரபுவிடம் “ரஜினி படத்தை முடித்துவிட்டு, கைதி 2 நிச்சயம் பண்ணலாம்” என கூறினாராம். அப்போது எஸ்.ஆர்.பிரபு, “கைதி 2 படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தை உள்ளே கொண்டு வருவது போல் பார்த்துக்கொள்ளுங்கள். சூர்யாவை நடிக்க வைப்பது என்னுடைய பொறுப்பு” என்று கூறியிருக்கிறார். ஆதலால் “கைதி 2” திரைப்படம் LCU என்பது உறுதி ஆகியுள்ளது. அதே போல் கார்த்தியும் சூர்யாவும் இணைந்து நடிக்கும் முதல் படமாக இது அமைந்துள்ளது.

“விக்ரம்” திரைப்படத்தில் இடம்பெற்ற ரோலக்ஸ் கதாபாத்திரத்தை நாம் மறந்துவிட முடியாது. பத்து நிமிடமே அந்த கதாபாத்திரம் வந்திருந்தாலும் “விக்ரம்” திரைப்படத்தின் வெற்றிக்கு அந்த கதாபாத்திரம் மிகப் பெரிய பலமாக இருந்தது. அதனை தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ் விஜய்யை வைத்து “லியோ” திரைப்படத்தை இயக்கி வரும் நிலையில் “லியோ” படத்திலும் சூர்யா நடிக்கிறார் என்று பல செய்திகள் பரவி வருகின்றன.
இந்த நிலையில் “கைதி” திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரம் இடம்பெறுவதாக வெளிவரும் செய்தி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.





