தமிழ் சினிமாவில் கவனிக்கப்படும் இயக்குனராக தன்னை வெளிப்படுத்திக் கொண்டவர் இயக்குனர் மாரி செல்வராஜ். இதுவரை அவரது இயக்கத்தில் 3 படங்கள் மட்டுமே வெளிவந்திருக்கின்றன என்றாலும், ஒவ்வொரு படத்திலும் தனக்கான குறியீடுகளை வெளிப்படுத்தி, விமர்சனங்களை பெற்றவர். அதுவே அவருக்கான அடையாளமாகவும் மாறி, பெரிய பிரபலத்தை தந்து விட்டது.
மாரி செல்வராஜூம் பா ரஞ்சித் வழியில் தன் படங்களின் கதைக்களங்களை தேர்வு செய்யக் கூடியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் இயக்கத்தில் முதன்முறையாக வௌியான படம் பரியேறும் பெருமாள். இந்த படம் ஜாதிய அடிப்படையானது. அடுத்த 2வது படம் கர்ணன். தனுஷ் நடித்த இந்த படத்தில் போலீஸின் அதிகார அடக்குமுறையை சொல்லி இருந்தார்.
மாரி செல்வராஜ் இயக்கிய 3வது படம் மாமன்னன். காமெடி நடிகர் வடிவேலு குணச்சித்திர நடிப்பிலும், உதயநிதி அவரது மகன் கேரக்டரிலும் நடித்திருந்தனர். தாழ்ந்த சாதி எம்எல்ஏவாக வடிவேலுவை, உயர்ந்த ஜாதியை சேர்ந்த ரத்னவேலு கேரக்டரில் நடித்த பகத் பாசில் கைப்பாவையாக நடத்துவதுதான் இந்த படத்தின் கதை.
இப்படி மாரி செல்வராஜ் இயக்கிய 3 படங்களிலுமே நிறைய சர்ச்சைகளை, பிரச்னைகளை கதைக்களத்தில் வைத்திருந்ததால் அவர் 3 படங்கள் மட்டுமே இயக்கிய நிலையிலும், 50 படங்கள் இயக்குனர் அளவுக்கு கோலிவுட் வட்டாரத்தில் அதிக கவனத்தை பெற்றுவிட்டார். விமர்சனங்களால் கூட ஒருவர் அதிக பப்ளிசிடி பெற முடியும் என்பதற்கு மாரி செல்வராஜ் நல்ல உதாரணமாக இருக்கிறார்.
இந்நிலையில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வாழை என்ற திரைப்படம் வருகிற 23ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இது குழந்தைகளுக்கான ஒரு படம் போல, படத்தின் போஸ்டர்களில் காணப்பட்டாலும், உண்மையில் இது மாரி செல்வராஜின் வாழ்க்கையில் நடந்த கதை. இளம் வயதில் அவருக்கு ஏற்பட்ட ஒரு கசப்பான அனுபவத்தை தான் இந்த படத்தில் அவர் சொல்லி இருக்கிறார்.
அதாவது சிறு வயதில் மாரி செல்வராஜ், அவரது உறவினர்களுடன் வாழை மரங்கள் ஏற்றிச் சென்ற ஒரு வேனில் பயணித்த போது, விபத்து ஏற்பட்டு அந்த வாகனத்தில் பயணித்த அனைவருமே இறந்து விட, மாரி செல்வராஜ் ஒருவர் மட்டுமே பிழைத்திருக்கிறார். இந்த கதைதான் வாழை. இந்த படத்தின் கதையை படமாக்கிய போது, கிளைமாக்ஸ் காட்சியில் பழைய சம்பவங்கள் நினைவுக்கு வந்து பயங்கர எமோசனல் ஆகி இருக்கிறார் மாரி செல்வராஜ். அதனால் உடல்நலம் சரியில்லாமல் போக, மருத்துவமனையில் அட்மிட் ஆகி சிகிச்சை பெற்று குணமாகி வந்து, பிறகுதான் படத்தின் கிளைமாக்ஸை இயக்கி முடித்திருக்கிறார் மாரி செல்வராஜ் என்பது தெரிய வந்துள்ளது.





