தமிழ் சினிமாவில் சிறுத்தை படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சிவா. கார்த்தி நடித்த சிறுத்தை படம் அபார வெற்றி பெற்றதால் சிறுத்தை சிவா என்றே பிறகு அழைக்கப்படுகிறார். அதன்பிறகு அஜீத்குமார் நடித்த வீரம், விவேகம், விஸ்வாசம், வேதாளம் என 4 படங்களை இயக்கினார். இதில் வேதாளம் படம் தவிர மற்ற படங்கள் பெரிய அளவில் ஹிட் ஆகின.
இதையடுத்து நடிகர் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த படத்தை சிறுத்தை சிவா இயக்கினார். இந்த படத்தில் ரஜினியை அண்ணனாகவும், கீர்த்தி சுரேஷை தங்கையாக நடிக்க வைத்து சென்டிமென்ட் பிழிந்து எடுத்திருந்தார். ரஜினியை சென்டிமென்ட் காட்சிகளில் பார்த்து, அவர் பேசிய தங்கம், தங்கம் என்ற வசனத்தை கேட்டு சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் நொந்து போய்விட்டனர். படமும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
இந்நிலையில், நடிகர் சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கிய படம்தான் கங்குவா. நேற்று முன்தினம் வெளியான இந்த படம், இந்தியன் 2 படத்துடன் ஒப்பிடும் அளவுக்கு, மிக மோசமான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. கதையே இல்லாமல் ஒரு படத்தை எப்படி எடுக்க முடியும் என்பதை சிறுத்தை சிவாவிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும் என்று ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.
கங்குவா படத்தை பொருத்த வரை படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் ஹீரோ சூர்யா உள்ளிட்ட அனைவருமே கஷ்டப்பட்டு நடித்திருக்கின்றனர். கடுமையாக உழைத்திருக்கின்றனர். ஆனால் கதையே இல்லாத ஒரு குப்பை படத்துக்கு இவ்வளவு உழைப்பை தந்தது வீண் என்றும் கடுமையாக விமர்சிக்கின்றனர். 2 நாட்களில் கங்குவா படம் தமிழ்நாட்டில் மொத்தமாக ரூ. 20 கோடிதான் வசூலித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
கங்குவா படத்தின் முதல் பாதியும் நன்றாக இல்லை, இரண்டாம் பாதியும் நன்றாக இல்லை. படம் முழுக்க கத்திக்கொண்டே இருக்கிறார்கள். காட்டு மொக்கை படம் கேள்விப்பட்டு இருக்கிறோம். இப்படி காடு காடாய் போய் மொக்கை படம் எடுத்திருக்கிறார்கள் என்று சினிமா விமர்சகர் ப்ளு சட்டை மாறன் கடுமையாக விமர்சித்துள்ளார். இதில் 2ம் பாகம் கங்குவா படம் உருவாகும் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
கங்குவா படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கூறுகையில், கங்குவா படத்துக்கு பிறகு இயக்குனர் சிறுத்தை சிவா, அஜீத்குமார் நடிக்கும் ஒரு படத்தை இயக்க உள்ளார். 5வது முறையாக அஜீத்குமாருடன் சிறுத்தை சிவா இணைய உள்ளார். அந்த படத்துக்கு பிறகு கங்குவா 2ம் பாகம் படப்பிடிப்பு துவங்கும் என்று கூறியிருக்கிறார். தயவு செய்து கங்குவா படத்தை 30 நிமிடங்கள் மட்டுமாவது கஷ்டப்பட்டு பார்த்துவிட்டு, பிறகு சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிப்பது குறித்து முடிவு செய்யுங்கள் என, அஜீத்குமாருக்கு அவரது ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





