நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தை துவங்கியிருக்கிறார். விஜயின் அரசியல் பயணத்தை பிற கட்சிகளை சார்ந்தவர்கள் தான் விமர்சிக்கிறார்களே தவிர, நடுநிலையாளர்கள் மத்தியில் விஜய் மீதான பார்வை பொதுவானதாகவே இருக்கிறது. அவர்களிடம் எதிர்மறை கருத்துகள் இல்லை.
இத்தனை ஆண்டுகளாக திமுக, அதிமுக என இரண்டு கட்சிகளுமே தமிழ்நாட்டை மாறி மாறி ஆட்சி செய்து வருகின்றனர். ஒருமுறை புதியவர்களிடம் ஆட்சி பொறுப்பை ஒப்படைத்தால் அவர்களால் தமிழ்நாட்டில் நிர்வாகத்தில் பெரிய மாற்றமோ, முன்னேற்றமோ ஏற்படலாம் என்ற எதிர்பார்ப்பும் மக்கள் மத்தியில் இருந்து வருகிறது.
நடிகர் விஜயகாந்த் தேமுதிக கட்சியை ஆரம்பித்த போது, கேப்டன் கட்சிக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பும், ஆதரவும் கிடைத்தது. அவர் சந்தித்த 2வது சட்டசபை தேர்தலிலேயே எதிர்கட்சி தலைவராக அமர்ந்தார். அதிமுக அமைச்சரவையில், சட்டசபையில் திமுகவை பின்னுக்கு தள்ளி தேமுதிக முன்னிலைக்கு வந்தது. திமுக மூன்றாமிடம் பெற்று பின்வாங்கியது. ஆனால் சந்தர்ப்ப சூழலால், விஜயகாந்த் தொடர்ந்து அரசியலில் செயல்பட முடியாமல் நோய்வாய்பட்டார்.
அதனால் தமிழக வெற்றிக் கழகம் துவங்கியுள்ள நடிகர் விஜய்க்கு, கேப்டன் வந்த போது கிடைத்த ஆதரவும், வரவேற்பும் மக்கள் மத்தியில் நிச்சயம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக டீன் ஏஜ் வயதினர் மத்தியில் விஜய்க்கு மிகப்பெரிய செல்வாக்கும், வரவேற்பும் இருக்கிறது. அதனால் வருகிற 2026 சட்டசபை தேர்தலில் விஜய்க்கு பெரிய ஓட்டு வங்கி இருப்பது உறுதியாக வாய்ப்புள்ளது.
கடந்த 22ம் தேதி, தவெக கட்சி கொடியை கட்சியின் தலைவராக விஜய் அறிமுகப்படுத்தி கொடியேற்றினார். கொடியில் யானை உருவங்கள் இருப்பது குறித்து பகுஜன் சமாஜ் கட்சி தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது. இந்திய தேர்தல் ஆணைய விதிமுறை மீறல் என்றும் சர்ச்சை எழுந்தது. ஆனால் விஜய் தரப்பில் இருந்து இதுவரை எந்த பதிலும், விளக்கமும் இல்லை.
ஆனால், இந்த விவகாரங்கள் பற்றி எல்லாம் உன்னிப்பாக கவனித்து வரும் நடிகர் விஜய், வருகிற 2026 சட்டசபை தேர்தலில் படை பலம், பண பலம், அரசியல் செல்வாக்கு என பல ஆண்டுகாலமாக தமிழகத்தில் அரசியல் நடத்தி வரும் திமுகவை வீழ்த்தி ஆட்சியை பிடிக்க போகிறோம். இந்த கொடி சர்ச்சை எல்லாம் ஒரு பிரச்னையா என்று அமைதி காத்து வருவதாக கூறப்படுகிறது.





