நடிகர் கமல்ஹாசனின் நிறுவனம் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்த அமரன் படம் வருகிற தீபாவளிக்கு ரிலீசாகிறது. இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி டைரக்ட் செய்திருக்கிறார். நாயகியாக சாய் பல்லவி நடித்திருக்கிறார். அமரன் படத்துக்கு ஜீவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். அமரன் படம் ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படம் தமிழகத்தைச் சேர்ந்த மறைந்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை கதையாகும்.
அமரன் படத்தின் டீசர் சில தினங்களுக்கு முன் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. தீபாவளிக்கு அமரன் படம் ரிலீஸாக உள்ளதால், படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் தொடர்ந்து சிவகார்த்திகேயன், ராஜ்குமார் பெரியசாமி, சாய் பல்லவி உள்ளிட்டோர் பங்கேற்று வருகின்றனர். இந்த படம் சிவகார்த்திகேயனின் திரைப்பயணத்தில் மிக முக்கிய படமான இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் எஸ் கே 23 என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மணி வசந்த் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு 60 சதவீதம் முடிவடைந்த நிலையில், மீதி படப்பிடிப்பு நடத்தப்பட உள்ளது.
இந்த சூழலில் படத்தின் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இந்தியில் பாலிவுட் ஸ்டார் நடிகர் சல்மான்கான் நடிக்கும் சிக்கந்தர் என்ற இந்தி படத்தை இயக்கி வருகிறார். சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தையும், சல்மான்கான் நடிக்கும் படத்தையும் மாறி மாறி டைரக்ட் செய்து வருகிறார். இப்போது அமரன் படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் சிவகார்த்திகேயன் பிஸியாக இருப்பதால் ஏஆர் முருகதாஸ் இந்தியில் சிக்கந்தர் படத்தின் ஷூட்டிங்கில் பங்கேற்று வருகிறார்.
கடந்த சில தினங்களுக்கு முன் நடிகர் சல்மான்கானுக்கு தீவிரவாத கும்பலிடம் இருந்து கொலை மிரட்டல் வந்தது. ரூ. 5 கோடி தராவிட்டால் கொலை செய்து விடுவதாக அந்த கும்பல் மிரட்டியுள்ளது. ஏற்கனவே மான் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில், இந்த தீவிரவாத கும்பல் சல்மான்கானுக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் எடுத்து வரும் நிலையில், இப்போது மீண்டும் அந்த அச்சுறுத்தலை செய்துள்ளது. இதனால் 24 மணி நேரமும் புல் செக்யூரிட்டில் 70க்கும் மேற்பட்ட பாதுகாவலர்களுடன், புல்லட் ப்ரூப் காரில்தான் சல்மான்கான் பயணிக்கிறார். ரகசியமான இடங்களில் பாதுகாவலர்கள் கண்காணிப்பில் இருந்து வருகிறார்.
மும்பையில் தாராவி போன்ற பெரிய செட் அமைத்து ஏஆர் முருகதாஸ் சல்மான் கானின் படப்பிடிப்பை நடத்தி வந்த நிலையில், இப்போது சல்மான்கான் எங்கிருக்கிறார் என்ற தெரியாமல், அவரை தொடர்பு கொள்ளாத முடியாத நிலையில் இயக்குனர் உள்ளிட்ட படப்பிடிப்பு குழு, ஷூட்டிங்கை தொடர்ந்து நடத்த முடியாமல் தவித்து வருகிறது. அவர் எங்கே இருக்கிறார் என்று தொடர்பு கொள்ள முடியாத அளவுக்கு சூழ்நிலை மாறி உள்ளது. இதனால் சிவகார்த்திகேயன் நடிக்க வேண்டிய படத்தின் படப்பிடிப்பும் பாதியில் நிற்கிறது. கடைசியில் சிவகார்த்திகேயனுக்கு சல்மான்கான் வில்லனாகி விட்டாரே என ரசிகர்கள் புலம்புகின்றனர்.





