நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் முக்கியமான, முன்னணி நடிகர்களில் 10 பேரில் ஒருவராக இருக்கிறார். தொடர்ந்து அவரது படங்கள் வெற்றி பெற்று வருகின்றன. தொடர்ந்து அவரது படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பும், ஆதரவும் கிடைத்து வருகிறது. அவரது நடிப்பில், இயக்கத்தில் வெளியான 50வது படம் ராயன், மிகப்பெரிய வெற்றி பெற்றது.
ராயன் படம் ரூ. 155 கோடிக்கு வசூலில் சாதனை படைத்த நிலையில் படத்தில் தனுஷின் அழுத்தமான நடிப்புக்கு ரசிகர்கள் ஆரவாரமான வரவேற்பை தந்துள்ளனர். அத்துடன் ஒரு இயக்குனராகவும் மற்ற நடிகர்களை மிக சிறப்பாக இந்த படத்தில் நடிக்க வைத்துள்ளார். அதிலும் தனுஷின் தங்கையாக நடித்த துஷாரா விஜயன் நடிப்பு வேற லெவலில் பாராட்டை பெற்றது.
ராயன் படத்தை தொடர்ந்து, இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா தனுஷூக்கு ஜோடியாக நடிக்கிறார். நாகர்ஜூனா முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். அத்துடன் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் 2 பாகங்களாக உருவாகும் இளையராஜா வாழ்க்கை வரலாறு படத்திலும் தனுஷ் நாயகனாக நடிக்க உள்ளார். 2025ம் ஆண்டின் துவக்கத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளது.
நடிகர் தனுஷ் ஏற்கனவே ப பாண்டி என்ற படத்தை முதல்முறையாக டைரக்ட் செய்தார். ராஜ்கிரண் – ரேவதி முதியோர் காதலை மையப்படுத்தி இந்த படத்தை தனுஷ் எடுத்திருந்தார். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து 2வது படமாக ராயன் படமும் பெரிய வெற்றியை பெற்றுள்ளது. 3வதாக நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தை தனுஷ் டைரக்ட் செய்துள்ளார். இந்த படமும் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.
இப்படி தனுஷ் இயக்கத்தில் வெளியான ப பாண்டி, ராயன் படங்களின் வெற்றியும், அடுத்து நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்துக்கு கிடைத்து வரும் ஆதரவும் தொடர்ந்து டைரக்ஷனில் தனுஷை ஆர்வம் செலுத்த வைத்துள்ளது. இந்த சூழலில் மீண்டும் ஒரு புதிய படத்தை தனுஷ் இயக்க உள்ளார்.
தனுஷ் இயக்கத்தில் உருவாக உள்ள இந்த 4வது படத்தில், நடிகர் தனுஷூக்கு ஜோடியாக நடிகை நித்யாமேனன் நடிக்க உள்ளார். இவர் ஏற்கனவே திருச்சிற்றம்பலம் படத்தில் தனுஷூக்கு ஜோடியாக நடித்தவர். அந்த படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக மத்திய அரசின் சிறந்த நடிகை தேசிய விருது அறிவிக்கப்பட்டவர். அவரை மீண்டும் கவுரவிக்கும் விதமாக தனது இயக்கத்தில் நடிக்க வைக்க உள்ளார் தனுஷ் என்பது குறிப்பிடத்தக்கது.





