கடந்த 2002ம் ஆண்டில் வெளியான படம் யூத். இந்த படத்தை வின்சென்ட் செல்வா இயக்கி இருந்தார். இந்த படத்தில் நடிகர் விஜய் நாயகனாக நடித்திருந்தார். இந்த படத்தில் ஆல்தோட்ட பூபதி என்ற அயிட்டம் பாட்டுக்கு சிம்ரன் விஜயுடன் சேர்ந்து குத்தாட்டம் போட்டிருந்தார். அந்த பாடல் இன்று வரை வைரலாக இருந்து வருகிறது.
சிரு நவ்வுட்டோ என்ற தெலுங்கு படத்தின் கதை தழுவல்தான் இந்த யூத் படம் என்பது குறிப்பிடத்தக்கது. சர்க்கரை நிலவே பெண் நிலவே காணும் போதே கரைந்தாயே பாடல் அப்போது செம டிரண்டிங் ஆக இருந்தது. இந்த படத்தில் நாயகியாக ஷாகீர்கான் நடித்திருந்தார். விவேக், விஜயகுமார், சிந்து மேனன், ஷயாம் கணேஷ், பாஸ்கி, மணிவண்ணன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
யூத் படத்தின் ஷூட்டிங்கில் நடந்த ஒரு சம்பவம் குறித்து அந்த படத்தில் ஒளிப்பதிவாளராக அப்போது பணியாற்றிய நடிகர் நட்டி (நடராஜ் சுப்ரமணியம்) சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசியிருக்கிறார். மகாராஜா, பிரதர், சதுரங்கவேட்டை, நம்ம வீட்டுப்பிள்ளை உள்ளிட்ட பல படங்களில் நட்டி நடித்துள்ளார். இவர் பிரபல ஒளிப்பதிவாளர் என்பதும் கவனிக்கத்தக்கது.
நடிகர் நட்டி கூறியதாவது, யூத் படப்பிடிப்பு நடந்த போது,கதாநாயகிக்கு ப்ளு ஸாரிக்கு பதிலாக மஞ்சள் சேலையை மாற்றி கொடுத்து விட்டனர். அதனால் கண்டினியூட்டி சொதப்பி விட்டது. பிறகு லேப்பில் ரஷ் போட்டு பார்த்த பிறகுதான் தவறு நடந்ததே தெரிந்தது. ஆனால் அந்த காட்சியை காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை படமாக்கி இருக்கிறோம். மீண்டும் அந்த காட்சியை எடுக்க வேண்டும். படத்தின் ஒளிப்பதிவாளராக என்னை விஜயிடம் பேசி எப்படியாவது அந்த காட்சியில் அவரை மீண்டும் நடிக்க வைக்குமாறு என்னை வலியுறுத்தினர்.
நானும் வேறுவழியின்றி விஜயிடம், அன்று எடுத்த காட்சிகள் பிலிம்ரோலில் ஏற்பட்ட பிரச்னையால் வீணாகி விட்டது. அதனால் மீண்டும் அந்த காட்சியை எடுக்க வேண்டும் என்று கூறினேன். அந்த சீனை காலை முதல் மாலை வரை எடுத்தோம். இப்போதே மணி 1 ஆகி விட்டது. இதற்கு மேல் எப்படி எடுக்க முடியும், எனக்கு இன்றுடன் ஷெட்யூல் முடிகிறது. வெளியூர் போகிறேன். போனால் 15, 20 நாட்கள் கழித்துதான் திரும்பி வருவேன் என்று விஜய் கூறினார்.
இல்லை சார், ஏற்கனவே எடுக்கப்பட்ட காட்சி என்பதால் அந்த எக்ஸ்பீரியன்ஸில் சீக்கிரமாக எடுத்துவிடலாம் என்று கூறி, அவரை சம்மதிக்க வைத்து, மாலை 5.30 மணிக்குள் காட்சியை கடகட என எடுத்து முடித்துவிட்டேன். சீன் முடித்து விட்டீர்களா என்று கேட்ட விஜய், என்னை தனியாக அழைத்து பொய் சொல்ல தெரிஞ்சா சொல்லணும். இப்படி சொல்லி மாட்டிக்க கூடாது. அன்னிக்கு அந்த சீன் எடுத்தப்போ அவங்க மஞ்சள் ஸாரி கட்டியிருந்தாங்க, இன்னிக்கு ப்ளு ஸாரி கட்டியிருக்காங்க. இதுகூட எனக்கு தெரியாதா, யாரோ செஞ்ச தப்பை நீங்க ஏன் ஏத்துக்கறீங்க என்று என்னிடம் செல்லமாக கோபப்பட்டார் விஜய் என்று நட்டி அதில் கூறியிருக்கிறார்.





