நடிகர் வடிவேலு தமிழ் சினிமாவில் காமெடியில் முன்னணி நடிகராக வலம் வந்தவர். 1990 – 2010 வரை 20 ஆண்டுகளில் வடிவேலு காமெடி இல்லாமல் திரைப்படங்களே இல்லை என்னும் அளவுக்கு அவரது காமெடி நடிப்பு பெரிய அளவில் ரசிகர்களால் வரவேற்கப்பட்டு கொண்டாடப்பட்டது. தினமும் ரூ. 10 லட்சம் சம்பளம் வாங்கும் நிலையில் வடிவேலு பிஸியாக நடித்துக்கொண்டு இருந்தார்.
ஆனால் ஒரு கட்டத்தில் கேப்டன் விஜயகாந்த் மீது அவர் எழுப்பிய குற்றச்சாட்டுகள், திமுக பிரசார மேடைகளில் விஜயகாந்த் குறித்து தவறாக விமர்சனம் செய்தது, திமுக ஆதரவாளராக தன்னை அவர் காட்டிக்கொண்டது, சில படங்களில் அவர் செய்த பிரச்னைகள் காரணமாக, திரைப்படங்களில் 10 ஆண்டுகளாக அவர் நடிக்கவில்லை.
இந்த பெரிய இடைவெளிக்கு பிறகு வடிவேலு நடித்த சில படங்களில் அவரது காமெடி நடிப்பு எடுபடவில்லை. மாமன்னன் படத்தில் அவரது குணச்சித்திர நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதற்கிடையே நடிகர் வடிவேலுவுக்கும், நடிகர் சிங்கமுத்துவுக்கும் இடையில் பிரச்னை ஏற்பட்டது. நிலம் வாங்கியது தொடர்பாக இருவருக்கும் மோதல் ஏற்பட்டு, கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது.
இந்நிலையில், சில ஆண்டுகளாக நேர்காணல்களில் கலந்துக்கொள்ளும் நடிகர் சிங்கமுத்து, நடிகர் வடிவேலு குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை எழுப்பி வருகிறார். அவர் சக நடிகர்களை வளர விடவில்லை, சக நடிகர்களுக்கு கிடைக்க வேண்டிய அதிக சம்பளத்தை கிடைக்க விடவில்லை, பெண்களிடம் மோசமாக நடந்துக்கொண்டார் என பல புகார்களை வடிவேலு மீது கூறியிருந்தார்.
இதைத்தொடர்ந்து நடிகர் வடிவேலு, சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் சிங்கமுத்து மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். ஊடகங்களில் தன்னைப் பற்றி மிக கேவலமாகவும், இழிவாகவும் பொய்யான புகார்களை கூறி, தன்னுடைய சினிமா புகழுக்கு களங்கம் ஏற்படுத்தி வரும் நடிகர் சிங்கமுத்துவுக்கு இனி என்னைப் பற்றி பேச கோர்ட் தடை விதிக்க வேண்டும். மேலும், இவரால் எனக்கு ஏற்பட்ட கடுமையான மன உளைச்சலுக்காகவும், மான நஷ்ட ஈடாக ரூ. 5 கோடி பெற்றுத் தர வேண்டும் என்றும் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், இந்த வழக்கில் பதில் அளிக்க கால அவகாசம் வேண்டும் என்று நடிகர் சிங்கமுத்து தரப்பில் கேட்கப்பட்டது. எனவே, அவர் கேட்டபடி 2 வார காலம் அவகாசம் அளித்து இந்த வழக்கில் பதிலளிக்க நடிகர் சிங்கமுத்துவுக்கு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.





