தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் சில மாதங்களுக்கு முன்பு நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதில் ஆகஸ்ட் 16ஆம் தேதி முதல் புதிய படங்கள் படப்பிடிப்பை துவங்க கூடாது, புதிய படம் துவங்க பூஜை போடக்கூடாது, நவம்பர் 1ம் தேதி முதல் திரைப்படம் சார்ந்த அனைத்து தயாரிப்பு பணிகளும், படப்பிடிப்பு பணிகளும் முற்றிலுமாக நிறுத்தப்படும் என்று அந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.
இதற்கு முக்கிய காரணம் தமிழ் சினிமாவில் உள்ள சில நடிகர்களின் அட்ராசிடியும் அடாவடியும்தான். படத்தில் நடிப்பதாக தயாரிப்பாளர்களிடம் பல கோடி ரூபாய் அட்வான்ஸ் பெற்றுக்கொண்டு கால்ஷீட் தராமல் மாதக்கணக்கில் ஆண்டுக்கணக்கில் தயாரிப்பாளர்களை காத்திருக்க வைப்பது என தவிக்க விடுகின்றனர்.
ஷூட்டிங் துவங்கும் முன்பே முதலிலேயே 100 கோடி 200 கோடி என மொத்தமாக சில நடிகர்கள் சம்பளம் வாங்கிக் கொண்டு, அவர்கள் படம் தயாரிக்கும் பணிக்கான பணமில்லாமல் தவிக்க விடுவது, அந்த நேரத்தில் அவர்கள் பல கோடி ரூபாய் வட்டிக்கு கடன் வாங்கி படப்பிடிப்பை நடத்தி கடன் சுமைகள் சிக்கிக் கொள்வது தொடர்கிறது.
மேலும் படப்பிடிப்பு தளத்தில் நடிகர்கள் போதிய ஒத்துழைப்பு தராமல் தயாரிப்பாளர்களை அதிக மன உளைச்சலை தருவது போன்ற பல பாதிப்புகள் காரணமாக இந்த முடிவை தயாரிப்பாளர் சங்கம் எடுத்திருந்தது. அதன்படி ஆகஸ்டு 16ம் தேதி முதல் புதிய படங்களின் படப்பிடிப்பு துவங்கக்கூடாது என்பது முக்கிய விதிமுறையாக அந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
தற்போது ஆகஸ்ட் 16ம் தேதிக்கு பிறகு புதிய படங்கள் துவங்கவில்லை என்று கூறப்பட்டாலும், அதற்கு முன்பாக இடைப்பட்ட சில மாதங்களுக்குள் 75 புதிய படங்கள் பூஜையுடன் துவங்கி, அந்த படங்களின் படப்பிடிப்பு இப்போது நடந்து வருகிறது. அதாவது படப்பிடிப்பை ஆகஸ்ட் 16ம் தேதிக்கு முன்பே துவக்கி ஒரு சில காட்சிகளை மட்டும் எடுத்துவிட்டு, இப்போது அந்த படத்தின் ஷூட்டிங்கை நடத்தி வருகின்றனர்.
தயாரிப்பாளர் சங்கம் எடுத்த முடிவின்படி ஆகஸ்ட் 16ம் தேதிக்கு பிறகு இந்த சூட்டிங் துவங்கவில்லை. அதற்கு பல வாரங்களுக்கு முன்பே துவங்கி விட்டோம் என்று தயாரிப்பாளர் சங்கத்தை நூதன முறையில் ஏமாற்றி உள்ளனர். வருகிற நவம்பர் 1ம் தேதி முதல் படங்கள் தயாரிப்பு பணிகள் முற்றிலும் நிறுத்தப்பட்டு விடும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அக்டோபர் இறுதிக்குள் இந்த படங்களின் படப்பிடிப்பு முழுமையாக முடியாது. இதை காரணமாக காட்டி இன்னும் சில மாதங்கள் ஸ்டிரைக்கை தள்ளி வைக்கவும் சினிமா இயக்குனர்கள் தரப்பில் ஒரு முயற்சி நடப்பதாக தெரிய வந்துள்ளது.





