கேரளா சினிமா துறையில் மலையாள படங்களில் நடிக்கும் நடிகைகளுக்கு பாலியல் துன்புறுத்தல், பாலியல் தொந்தரவு செய்த சம்பவங்கள் உண்மைதான் என ஹேமா கமிட்டி விசாரணை அறிக்கை உறுதியான நிலையில், அந்த சம்பவத்தின் எதிரொலியாக தொடர்ந்து பல நடிகைகள், சில இயக்குனர்கள் சில நடிகர்கள் மீது பாலியல் புகார் எழுப்பி வருகின்றனர்.
இது மலையாள சினிமாவுலகில் பலத்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததால் மலையாள நடிகர்கள் சங்கம் ( அம்மா) கலைக்கப்பட்டு விட்டது. பாலியல் புகார்கள் தொடர்பாக போலீஸ் வழக்குப் பதிவுகளும் செய்யப்பட்டுள்ளன. இந்த சூழ்நிலையில் தற்போது பிரபல நடன இயக்குனர் மீதும் பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடன இயக்குனராக இருப்பவர் ஜானி மாஸ்டர். தமிழில் பல சூப்பர் ஹிட் பாடல்கள் ஜானி தான் நடனம் அமைத்துள்ளார். முன்னணி ஹீரோக்கள் பலரும் அவரை விரும்பி தங்கள் படங்களில் நடனம் அமைக்க சொல்வது வழக்கம். அந்த அளவுக்கு அவர் மிகச் சிறப்பான நடன இயக்குனராக சினிமா துறையில் புகழ்பெற்றுள்ளார்.
ஜெயிலர் படத்தில் இடம்பெற்ற தமன்னா நடனமாடிய காவாலய்யா பாடல், வாரிசு படத்தில் விஜய், பூஜா ஹெக்டே நடனமாடிய ரஞ்சிதமே பாடல், திருச்சிற்றம்பலம் படத்தில் தனுஷ் நித்யாமேனன் நடனமாடிய மேகம் கருக்காதா பெண்ணை பெண்ணே என்ற பாடல், பீஸ்ட் படத்தில் அரபிக் குத்து, ஜாலியோ ஜிம்கானா போன்ற பாடல்கள், சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படத்தில் செல்லம்மா செல்லம்மா பாடல், நம்ம வீட்டு பிள்ளை என்ற படத்தில் காந்த கண்ணழகி பாடல் உள்ளிட்ட பாடல்களுக்கு நடனம் அமைத்தவர் ஜானி மாஸ்டர்.
இந்நிலையில் 21 வயதான நடனப் பெண் ஒருவரை பாலியல் ரீதியாக ஜானி துன்புறுத்தியதாக அவர் மீது சைபராபாத் ராய்துர்கம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை மும்பை ஹைதராபாத் ஆகிய நகரங்களில் படப்பிடிப்பு நடந்த போதும், நர்சிங்கி என்ற இடத்தில் உள்ள தனது வீட்டிலும் தன்னை பலமுறை தாக்கியதாக அந்த பெண் புகார் அளித்துள்ளார்.
ஜானி மாஸ்டர் மீது மூன்று பிரிவு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தெலுங்கானா மாநில பெண்கள் பாதுகாப்பு பிரிவின் டைரக்டர் ஜெனரல் ஷிகா கோயல் இதுகுறித்து விசாரிக்கும்படி திரைப்படம் அமைப்பினருக்கும் ஆலோசனை கூறியுள்ளதாக தெரிய வருகிறது. மேலும் பாலியல் துன்புறுத்தல் பிரிவில் வழக்கு பதிவு செய்யுமாறு போலீஸ் துறையிடம் தெரிவித்துள்ளதாகவும் தெலுங்கு பட வட்டாரத்தில் தகவல் வெளியாகி உள்ளது. இது தெலுங்கு சினிமா வட்டாரத்திலும், தமிழ் சினிமா வட்டாரத்திலும் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.





