தமிழ் சினிமாவில் 73 வயதிலும் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படுகிறார் நடிகர் ரஜினிகாந்த். ஜெயிலர் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக அவர் நடித்துள்ள வேட்டையன் படம், வருகிற அக்டோபர் 10ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற 20-ம் தேதி நேரு இண்டோர் ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. இதற்கான பிரம்மாண்ட ஏற்பாடுகளை லைகா புரடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம் செய்து வருகிறது.
நடிகர் ரஜினிகாந்த் கடந்த 1975ம் ஆண்டில் இயக்குனர் சிகரம் கே பாலச்சந்தர் இயக்கிய அபூர்வ ராகங்கள் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து வில்லனாக சில படங்களில் நடி்ததார். பிறகு ஹீரோவாக மாறி முன்னணி நடிகராக மாறினார். இதுவரை 170 படங்களில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளார். அவர் தற்போது நடித்துவரும் லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி படம் ரஜினியின் 171 வது படம் ஆகும்.
வரும் 2025ம் ஆண்டில் நடிகர் ரஜினிகாந்த் சினிமா பயணத்தில் தன்னுடைய 50வது ஆண்டு பொன்விழாவை கொண்டாடுகிறார். தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகளை வெற்றிகரமாக கடந்து இன்றும் உச்ச நட்சத்திரமாக சூப்பர் ஸ்டார் என கொண்டாடப்படும் நடிகர் ரஜினிகாந்த், பொன்விழா ஆண்டில் அவரை கௌரவப்படுத்தும் விதமாக விழா எடுக்க சினிமா துறையில் ஏற்பாடுகள் துவங்கியுள்ளன. விரைவில் இதற்கான அதிகாரபூர்வமான அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், நடிகர் தனுஷை காதலித்து, 2004ம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டனர். திருமணமாகி 18 ஆண்டுகள் இருவரும் ஒன்றாக வாழ்ந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். அவர்கள் விவாகரத்து கேட்டு மனு செய்திருந்த நிலையில், கோர்ட்டில் அவர்களது வழக்கு விரைவில் விசாரணைக்கு வர இருக்கிறது. இந்த விசாரணையில் அவர்கள் சொல்லும் முடிவு அடிப்படையில் அவர்களுக்கு விவாகரத்து வழங்கப்படுமா, இல்லையா என்பது தெரிய வரும்.
ஆனால் ரஜினியின் 50வது ஆண்டு பொன்விழா கொண்டாடப்படும் அடுத்த ஆண்டில், அவர்கள் இருவரும் வாழ்க்கையில் மீண்டும் இணைந்தால் அது ரஜினிக்கு வாழ்நாள் சந்தோஷமாக பொன்விழா சினிமா பயணத்தில் அவருக்கு கிடைக்கும் மிகப்பெரிய பரிசாக அமையும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஏனெனில் ரஜினிகாந்தை பொருத்தவரை தன் மகள்கள் சந்தோசமாக வாழ வேண்டும் என்று மிகவும் விரும்புகிறார். அதற்காகத்தான் 73 வயதிலும் தனது ஓய்வு பற்றி கவலைப்படாமல் இன்னும் தேனீ போல சுறுசுறுப்பாய் உழைத்துக் கொண்டிருக்கிறார். அப்படிப்பட்ட அவருக்கு ஒரு மகளாக ஐஸ்வர்யாவும், ஒரு மருமகனாக நடிகர் தனுஷும் தம்பதியாக இருவரும் வாழ்க்கையில் மீண்டும் இணைந்து ரஜினிக்கு பொன்விழா பரிசு தர வேண்டும் என்பதே ரசிகர்களின் வேண்டுகோளாக இருந்து வருகிறது.





