நடிகர் அஜித்குமார் இப்போது விடாமுயற்சி படத்தைத் தொடர்ந்து குட் பேட் அக்லி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். படத்தின் கதாநாயகியாக திரிஷா நடிக்கிறார். இந்த படத்தில் சுமன், நட்டி உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். ஐதராபாத்தில் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், அடுத்த கட்டமாக இத்தாலி நாட்டுக்கு படக்குழு செல்கிறது.
இத்தாலி நாட்டில் 70 நாட்களுக்கு படப்பிடிப்பு நடத்த இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் திட்டமிட்டுள்ளார். விரைவில் நடிகர் அஜித்குமார், இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன், கதாநாயகி திரிஷா உள்ளிட்ட படக்குழு இத்தாலி நாட்டுக்கு செல்ல உள்ளது. இங்கு 70 நாட்கள் நடக்கும் படப்பிடிப்பில் பாடல் காட்சிகளும் முக்கியமான சண்டை காட்சிகளும் இதர காட்சிகளும் எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
நடிகர் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான தி கோட் படம் இதுவரை 390 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ளது. இதைத் தொடர்ந்து நடிகர் விஜய் தனது 69 வது படத்தில் நடிக்க ஆயத்தமாகி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் அக்டோபரில் துவங்கும் என்று கூறப்படுகிறது. இந்த படத்தை இயக்குனர் எச் வினோத் இயக்குகிறார். இந்த படத்தில் சிம்ரன், மோகன்லால், மமீதா பைஜூ பூஜா ஹெக்டே உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிப்பதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ் சினிமாவில் விஜய், அஜீத்குமார் நடிக்க வந்த ஆரம்ப காலகட்டத்தில் ராஜாவின் பார்வையிலே என்ற படத்தில் விஜய் நாயகனாக நடித்தார். அந்த படத்தில் செகண்ட் ஹீரோவாக நடிகர் அஜித்குமார் நடித்திருந்தார். அதன்பிறகு ஒரு காலகட்டத்தில் இருவருமே தமிழ் சினிமாவில் பெரிய வளர்ச்சி அடைந்த நிலையில், முக்கிய ஹீரோக்களாக மாறினர். அதன்பிறகு அஜித் விஜய் என்ற போட்டியான நிலை தமிழ் சினிமாவில் உருவானது.
இதனால் விஜய் படம் வெளியாகும் போது அஜித்குமார் ரசிகர்களும், அஜித்குமார் படம் வெளியாகும் போது விஜய் ரசிகர்களும் எதிர்மறை விமர்சனங்களை வெளியிட்டு சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வந்தனர். ஆனால் தனது 69 படத்தை முடித்துவிட்டு விஜய் அரசியலுக்கு செல்ல போவதால், அஜித்குமார் ரசிகர்கள் விஜய் குறித்த எதிர்மறை கருத்துகளை தவிர்த்து வருகின்றனர்.
சமீபத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான தி கோட் படத்தில் அஜித் பேசிய வசனத்தை விஜய் பேசி நடித்திருந்தார். அதே போல் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜீத்குமார் நடித்துவரும் குட் பேட் அக்லி படத்தில் விஜயின் பிரபலமான வசனமும் ஒன்றை பேசி நடிக்கிறார் அஜித்குமார். தொழில் ரீதியாக இருவரும் போட்டியாளர்களாக இருந்தாலும், தனிப்பட்ட முறையில் நண்பர்கள் என்பதால் விஜய் மீதான தனது அன்பை வெளிப்படுத்தும் விதமாக தனது படத்தில் அஜித்குமார், விஜய் பேசிய வசனத்தை பேசி நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.





