தமிழ் சினிமாவில் பெயர் சொல்லும் கவிஞராக ஆறு முறை சிறந்த பாடலாசிரியர் தேசிய விருது பெற்ற பெருமைக்கு சொந்தக்காரர் கவிஞர் வைரமுத்து. கடந்த 1995ம் ஆண்டு வெளியான ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா படத்தில் பாடல் ஆசிரியராக பணியாற்றிய போது நடந்த சுவாரசியமான சம்பவத்தை, சமீபத்தில் தனது எக்ஸ் பக்கத்தில் கவிஞர் வைரமுத்து பதிவு செய்துள்ளார்.
அதில், வைரமுத்து கூறியிருப்பதாவது, பாட்ஷா படத்திற்கு பாட்டு எழுத தயாரிப்பாளர் ஆர் எம் வீரப்பன் என்னை அழைத்தார். அப்போது உங்களுக்கு எவ்வளவு சம்பளம் என்று கேட்டார். அதற்கு நான் முழு படத்திற்கு 50,000 ரூபாய் வாங்குகிறேன், என்றேன்.இதைக் கேட்டு ஆர்எம்வீ அதிர்ச்சியானார். அதற்குப் பின் அவர், பாடலாசிரியருக்கு இவ்வளவு சம்பளமா, நாங்கள் எல்லாம் ஒரு பாட்டுக்கு 500 முதல் 1000 ரூபாய் தான் தருவது தான் வழக்கம், என்று கூறினார்.
இப்போது நான் வாங்கும் ஊதியத்தை சொல்லி விட்டேன். அப்புறம் உங்கள் முடிவு என்று நான் கூறினேன். அவரும் பாடல் எழுதுங்கள் பார்க்கலாம் என்று கூறிவிட்டார். பாட்ஷா படத்துக்கு எல்லா பாடலும் எழுதி முடித்தவுடன், நான் கேட்ட சம்பளத்தில் 5 ஆயிரம் மட்டும் குறைத்துக் கொண்டு ரூ.45,000 என்னிடம் கொடுத்தார். நான் பேசாமல் பெற்றுக் கொண்டேன்.
பாட்ஷா படம் வெற்றி பெற்றது. படத்தின் வெற்றியில் பாடல்களுக்கும் பங்கு உண்டு என்றும் பேசப்பட்டது. அதன்பின் ஒருநாள் நான் நாகேஸ்வரராவ் பூங்காவில் பாட்டெழுதி கொண்டிருந்தேன். அந்தப் பக்கமாக சென்ற காரில் இருந்து இறங்கி வந்த ஒருவர், வீட்டுக்குப் போகும்போது, ஆர்எம் வீரப்பன் உங்களை அலுவலகம் வந்து போக சொன்னார், என்றார். நான் அங்கு சென்றதும், என் கையில் ஒரு உறையை தந்து, நாங்கள் குறைத்த பணம் ரூ.5,000 என்றார். தயாரிப்பாளர் குறைத்தாலும் தமிழ் விடாது என கருதிக்கொண்டு அந்த 5,000 ரூபாயை ஆட்டோ ரிக்சா நிறுத்தத்திற்கு அன்பளிப்பாக வழங்கி விட்டேன், என்று அதில் கூறியிருக்கிறார்.
பாடகி சுசித்ரா, சமீபத்தில் கவிஞர் வைரமுத்து குறித்து ஒரு நேர்காணலில் பேசியிருந்தார். அப்போது, வைரமுத்து முதலில் பாடகிகளை தான் குறி வைப்பார். உன் குரலில் காமம் இருக்கிறது, காதல் இருக்கிறது என்று பேசி வலை விரிப்பார் என்று அதில் அவர் கூறியிருந்தார். பாடகி சுசித்ராவை கவிஞர் வைரமுத்து பரிசு தருவதாக வீட்டுக்கு அழைத்ததாகவும், அப்போது சசித்ரா தனது பாட்டியுடன் அங்கு சென்றதாகவும், அதனால் வைரமுத்து அப்செட் ஆனதாகவும் கூறினார்.
மேலும், சசித்ராவின் பாட்டி வைரமுத்துவிடம், பரிசு தருவதாக கூறினீர்களே என்று கேட்டபோது, வீட்டுக்கு பின்னால் சென்று இரண்டு ஷாம்பூ பாட்டில்களை கொண்டு வந்து தந்தார் என்று அந்த பேட்டியில் சுசித்ரா கூறியிருந்தார். வைரமுத்து சுசித்ராவுக்கு ஷாம்பூ தந்த விஷயம் சமூக வலைதளங்களில் வைரலானது. பலரும் அதை கலாய்த்து மீம்ஸ் பதிவிட்டனர். அதனால் ஷாம்பூ கதையை மறைக்கத்தான் பாட்ஷா பாட்டெழுதிய கதையை வைரமுத்து அவிழ்த்து விட்டிருக்கிறாரோ என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.





