இயக்குனர் சசிக்குமார் இயக்கிய நடித்த முதல் படம் சுப்ரமணியபுரம். இந்த படத்துக்கு இசையமைத்தவர் ஜேம்ஸ் வசந்தன். இந்த படத்தின் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் ஆன நிலையில் ஜேம்ஸ் வசந்தன் சிறந்த இசையமைப்பாளர் என்ற ஒரு அங்கீகாரத்தை தமிழ் சினிமா ரசிகர்களிடம் பெற்றார். மேலும் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பள்ளி மாணவ மாணவியர் பங்கேற்கும் தமிழோடு விளையாடு என்ற ரியாலிடி சவால் நிகழ்ச்சியை அவர் நடத்தி வருகிறார்.
மேலும் பல்வேறு பொது நிகழ்ச்சிகள் கருத்தரங்க நிகழ்வுகளிலும் ஜேம்ஸ் வசந்தன் பங்கேற்று வருகிறார். தவெக தலைவர் விஜய் மற்றும் இசையமைப்பாளர் இளையராஜா உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் குறித்து அவ்வப்போது மிகவும் காட்டமான முறையில் கடுமையான விமர்சனங்களை முன்வைப்பது ஜேம்ஸ் வசந்தனின் வழக்கமாக இருந்து வருகிறது. அவரது வலைதள பதிவுகளில் அவ்வப்போது தனது விமர்சனங்களை பதிவு செய்து வருகிறார்.
இந்நிலையில் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் வெளியிட்டுள்ள ஒரு பதிவில் கூறியிருப்பதாவது, பெரம்பூர் தொகுதி வேட்பாளர் சி ஜோசப் விஜய் திருச்சி கிழக்கு தொகுதி வேட்பாளர் சி ஜோசப் விஜய் என்று கொஞ்சம் நாணத்துடன் தன்னையே அறிமுகப்படுத்திக் கொண்டு ரசிகர்களை சிரம் தாழ்த்தி வணங்கும்போது நன்றாக இருந்தது.
குழந்தைகள் சில சமயங்களில் தங்களுக்கு ஏற்படும் பெருமிதத்தையும் அளவு கடந்த மன மகிழ்ச்சியையும் மறைக்க முயன்று தோற்று சிரிப்பார்களே? அதை அவர் முகத்தில் பார்க்க முடிந்தது நன்றாக தான் இருந்தது. ஆனால் விஷயம் அதுவல்ல. அரசியலில் அடுத்த மட்டத்தைக் கூட புரிந்து கொள்ளாத ஒருவர் என்பதை தான் அது காட்டியது. அரசியலின் ஆழத்தைப் பற்றி எல்லாம் பேசவில்லை. தனக்கு தொடர்பில்லாத இன்னொரு துறையைப் பற்றிய அடிப்படை புரிதல் ஒரு சராசரி மனிதனுக்கு என்று ஒன்று இருக்கும் அல்லவா?
அது கூட தனக்கு இல்லை என்பதை வெளிப்படுத்திய உடல் மொழி தான் அது. ஒரு பெரிய கட்சியில் காலம் காலமாக உழைத்து என்றாவது ஒருநாள் தனக்கு ஒரு வேட்பாளர் வாய்ப்பு கிடைத்து விடாதா என்று ஏங்கிய ஒருவனுக்கு கிடைத்த ஒரு உண்மையான அரசியல்வாதியின் மகிழ்ச்சிக்கும், உடல் மொழிக்கும் தொடர்பே இல்லாத ஒரு வெளி நபரின் வெள்ளந்தியான அறியாமையை தான் என்னால் பார்க்க முடிந்தது.
அறிவுக் குருடர் கூட்டம் கெட்ட வார்த்தைகளை தவிர்த்து விட்டு திட்டலாம். உங்களுக்கு தெரிந்த ஒன்று. அந்த ஒன்றையும் தடுத்துவிட்டால் பாவம் வேறு என்ன செய்வீர்கள் என்று ஜேம்ஸ் வசந்தன் அந்தப் பதிவில் நடிகர் விஜய் குறித்தும் அவரது தவெக கட்சியினர் குறித்தும் கிண்டலாக கூறியிருக்கிறார். அவரது இந்த பதிவு இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.





