புதிய படங்கள் ரிலீஸ் செய்யப்படுவதற்கு முன்பாக ரசிகர்கள் மத்தியில் அந்த படம் குறித்த எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்யவும் ரசிகர்களுக்கு புதிய படம் குறித்த அறிவிப்பை கொண்டு செல்லவும் விளம்பர நிகழ்ச்சியாக படத்தின் பிரமோ நிகழ்ச்சிகள் செய்யப்படுகிறது. வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா, பிரமோ நிகழ்ச்சிகளில் ஒன்றாக சமீபத்தில் பிரமாண்டமாக நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
புதிய படத்தின் இசை வெளியீட்டு விழா, நடிகர் நடிகைகள் பங்கேற்கும் பிரமோ நிகழ்ச்சிகள், பல பகுதிகளில் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் நடித்த படம் தேவரா. இந்த படத்தில் கதாநாயகியாக ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடித்திருக்கிறார். வருகிற 27ம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆகிறது.
தேவரா படத்தின் ரிலீஸ்சை முன்னிட்டு படத்தின் பிரமோஷன் பணிகளில் படக் குழு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. சில தினங்களுக்கு முன் சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் ஜூனியர் என்டிஆர், ஜான்விகபூர், படத்தின் இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தொடர்ந்து ஐதராபாத்தில் இருக்கும் பிரபல ஓட்டல் ஒன்றில் தேவரா படத்தின் ப்ரீ ரிலீஸ் விழா பிரம்மாண்டமாக நடத்த நேற்று ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டிருந்த நிலையில், இசையமைப்பாளர் அனிருத் மேடையில் பாடப் போகிறார் என்பதால் அதற்கான ஸ்டேஜில் ஒலி ஒளி அமைப்புகளும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
ஆனால் இந்த நிகழ்ச்சியில் ஜூனியர் என்டிஆரின் ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டதால் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. அரங்கம் நிறைந்துவிட்டது என்று சொல்லி ஓட்டல் நிர்வாகம் கேட்டை இழுத்து மூடியிருக்கிறது. அதனால் ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டு ஓட்டலை அடித்து நொறுக்கி இருக்கின்றனர். போலீசாரும் ஒரு கட்டத்தில் அவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை.
இதனால் தேவரா படத்தின் ப்ரி ரிலீஸ் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. விழா நடப்பதாக இருந்த அந்த ஓட்டலுக்குள், விழா அரங்கு பகுதியில் இருந்த இருக்கைகளை அங்குள்ள ரசிகர்கள் ஆவேசமாக எடுத்து தரையில் அடித்து நொறுக்கி, தூக்கி வீசும் காட்சிகள் வீடியோவாக வெளியாகி, இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.





