நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். ரஜினி கமல் விஜய் அஜீத்குமார் வரிசையில் தனுஷ் சிவகார்த்திகேயன் சூர்யா போன்றவர்களும் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏ கிரேடு நடிகர்களாக தயாரிப்பாளர்கள் இவர்களை வகைப்படுத்தி உள்ளனர். ஏனெனில் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் தராத நடிகர்களாக இவர்கள் இருக்கின்றனர்.
நடிகர் தனுஷ் சொந்த வாழ்க்கையில் பல விமர்சனங்களை, சரிவுகளை சந்தித்து வருகிறார். இன்னும் சில மாதங்களில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் முன்னாள் மருமகன் என்ற நிலைக்கு அவர் ஆளாகவும் வாய்ப்புள்ளது. ஏனெனில் தனுஷூம், அவரது மனைவி ஐஸ்வர்யாவும் விவாகரத்து கேட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர். வரும் அக்டோபரில் அது விசாரணைக்கு வருகிறது.
நடிகர் தனுஷை பொருத்தவரை மிகவும் போராடி ஜெயித்தவர் என்றால் அது மிகையல்ல. அவர் நடிக்க வந்த துவக்கத்தில், தனுஷ் அதிகளவில் உருவக்கேலிக்கு ஆளானார். கருப்பாக, ஒல்லியாக, சுள்ளான் போல இருக்கும் இவரெல்லாம் ஹீரோவா என்றுதான் அவரை பலரும் வசைபாடினர். எனினும் விமர்சனங்களை பற்றி கவலைப்படாமல் திறமைையை காட்டி உழைத்து முன்னேறினார் தனுஷ் என்றால் அது மிகையல்ல.
தனுஷின் ஆரம்ப கால சினிமா வாழ்க்கையில் அவரது உயர்வுக்கு ஏணியாக இருந்து உதவியவர் அவரது அண்ணன் செல்வராகவன்தான். அவர்தான் மிக முக்கிய படங்களில் தனுஷை நடிக்க வைத்து, அவருக்கான ஒரு இடத்தை உருவாக்கி தந்தார். அதை, சமீபத்தில் நடந்த ராயன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் வெளிப்படையாக கூறி தன் நன்றியை தெரிவித்திருந்தார் நடிகர் தனுஷ் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நடிகர் தனுஷ் எழுதிய இயக்கியுள்ள படம் ராயன். சன் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது. ஏஆர் ரகுமான் இசை அமைத்துள்ளார். தனுஷின் 50வது படம் ராயன் என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த வெள்ளிக்கிழமையன்று வெளியான இந்த படம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
ஆனால் அதே நேரத்தில் படம் முழுக்க வன்முறை, இருட்டான காட்சிகளில் படம் முழுக்க வருகிறது. படத்தில் 200 பேரை குத்தூசியால் குத்தி கொல்கிறார் தனுஷ். வன்முறை மட்டுமே படமாக இருப்பதால், குடும்பத்துடன் இந்த படத்தை பார்க்க முடியாது என்றெல்லாம் எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆனால் கடந்த 3 நாட்களில் இந்த படம் உலகம் முழுவதும் 75.42 கோடி ரூபாயை வசூலித்துள்ளது. இன்னும் ஓரிரு தினங்களில் 100 கோடி ரூபாய் வசூலை எட்டும் என்று பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகிறது.





