தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருப்பவர் யுவன் சங்கர் ராஜா. இவர் இசைஞானி இளையராஜாவின் இளைய மகன் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது அண்ணன் கார்த்திக் ராஜாவும் இசையமைப்பாளர்தான். இவரது சகோதரி பவதாரணி பாடகியாக இருந்தவர். சில மாதங்களுக்கு முன் நோய்வாய்பட்டு, பவதாரணி மறைந்தார்.
கடந்த 20 ஆண்டுகளில் தமிழில் வந்த பல படங்களுக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் கவிஞர் நா முத்துக்குமார் எழுதிய பாடல் வரிகளுக்கு, யுவன் சங்கர் ராஜாவின் இசை என்பது தேனில் விழுந்த பலாச்சுளை போல மிகச் சிறப்பாக இசை ரசிகர்களை ரசிக்க வைத்தது.
சமீபத்தில் வெளியான வெங்கட் பிரபுவின் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இந்த படத்தின் அனைத்து பாடல்களும் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றன. ஆரம்பத்தில் இந்த படத்தின் பாடல்கள் பெரிய அளவில் ரசிகர்களை கவராத நிலையில் படம் வெளியான பிறகு, யுவன் சங்கர் ராஜாவின் பிஜிஎம் ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் கோவையில் உள்ள கொடிசியா மைதானத்தில் வரும் அக்டோபர் மாதம் 12ம் தேதி இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் வேகமாக நடந்து வருகின்றன. இதை நேரில் பார்வையிட கோவைக்கு வந்த இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், பழைய பாடல்களை ரீமேக் செய்வதால் அதன் உண்மை தன்மை மாறாது. தற்போது வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு ஏஐ தொழில் நுட்பத்தால் அடுத்த 10 ஆண்டுகளில் இசையமைப்பாளர்களுக்கு வேலையே இருக்காது. ஏஐ மென்பொருளுக்கான கட்டளைகளை உருவாக்க தெரிந்தவர்கள் அதிகளவில் பணம் சம்பாதிக்க போகிறார்கள் என்று குறிப்பிட்டார்.
விஜயின் அரசியல் கட்சி குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, விஜய்க்கு ஆல் தி பெஸ்ட் என்று சொன்ன யுவன் சங்கர் ராஜா, விஜயின் கட்சிக்கு பாடல் கேட்டால் நிச்சயம் செய்து கொடுப்பேன், என்றார். விஜய்யின் கட்சி பாடல், தமிழன் கொடி பறக்குது, தலைவன் யுகம் பொறக்குது என்ற பாடல் ஏற்கனவே வெளியான நிலையில், அவரது முதல் அரசியல் மாநாடு வருகிற அக்டோபர் 27ம் தேதி நடைபெற உள்ளது. ஒருவேளை அந்த மாநாட்டில் விஜய் புகழ் பாடும் கட்சி பாடல் தேவைப்படும் எனில், அந்த பாடலுக்கு இசை அமைத்து தர யுவன் சங்கர் ராஜா, விஜய் கேட்டால் சம்மதிப்பேன் என்று கூறியிருப்பதாக, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.





