தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல படங்கள் ரிலீஸாகி வருகின்றன. இதுவரை 170க்கும் மேற்பட்ட படங்கள் ரிலீஸாகி உள்ளன. கடந்த வாரம் 20ம் தேதி கடைசி உலகப் போர், லப்பர் பந்து, நந்தன், தோனிமா, தோழர் சேகுவாரா, கோழிப்பண்ணை செல்லதுரை ஆகிய படங்கள் வெளியானது. அதேபோல் வருகிற 27ம் தேதி மெய்யழகன் உள்ளிட்ட 6 படங்கள் வெளியாகின்றன.
நடிகர் சூர்யா, ஜோதிகா தயாரிப்பில் அரவிந்த்சாமி, கார்த்தி நடித்த படம் மெய்யழகன். ஸ்ரீ திவ்யா, ராஜ்கிரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 96 பட இயக்குனர் பிரேம்குமார் இயக்கிய இந்த படத்திற்கு கோவிந்தா வசந்த் இசையமைத்துள்ளார்.
ஜூனியர் என்டிஆர் மற்றும் ஜான்வி கபூர் நடிப்பில் தேவரா படம், 27ம் தேதி வெளியாகிறது. சைத்ராராய், சயீப் அலிகான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கொட்டராலா சிவா இயக்கியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசை யமைத்துள்ளார். ரூ. 300 கோடி பட்ஜெட்டில் இந்த படம் தயாராகி உள்ளது.
சதீஷ் கதாநாயகனாக நடித்துள்ள படம் சட்டம் என் கையில். மெரினா, வாகை சூடவா, தாண்டவம், எதிர்நீச்சல், கத்தி உள்ளிட்ட பல படங்கள் மூலம் காமெடி நடிகராக கவனம் பெற்றவர் சதீஷ். நாய் சேகர் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். தற்போது சட்டம் என் கையில் என்ற படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படத்தில் சம்பதா, அஜய் ராஜ், பவன் நவகீதன், விதியா பிரதீப், மைம் கோபி, ரித்விகா தமிழ்ச்செல்வி, கஜராஜ், பாவா செல்லதுரை, ராமதாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
விஜய் ஆண்டனி நடிப்பில் உருவான படம் ஹிட்லர். படை வீரன், வானம் கொட்டட்டும் உள்ளிட்ட படங்களை இயக்கிய தனா இந்த படத்தை இயக்கி உள்ளார். இந்த படத்தில் ரெடின் கிங்ஸ்லி, விவேக் பிரசன்னா, ஆடுகளம் நரேன், இயக்குனர் தமிழ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். எஸ் ஜெ சீனு இயக்கத்தில் பிரபுதேவா நடித்த படம் பேட்ட ராப். இதில் வேதிகா நாயகியாக நடித்துள்ளார். ரியாஸ்கான், பகவதி பெருமாள் உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்துள்ளனர். டி இமான் இசையமைத்த இந்த படத்தை ப்ளூ ஹில் பிலிம்ஸ் தயாரித்துள்ளது. இந்த படத்தில் சன்னி லியோன் ஒரு பாடல் காட்சியில் பிரபுதேவாவுடன் நடனமாடியுள்ளார்.
மேலும் விஜய் சத்யா, ஷெரின் நடித்துள்ள படம் தில் ராஜா. இயக்குனர் ஏ வெங்கடேஷ் இயக்கியுள்ள இந்த படத்தில் கேபிஒய் புகழ் பாலா காமெடி ரோலில் நடித்துள்ளார். அம்ரிஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்துக்கு சூப்பர் சுப்பராயன் சண்டை காட்சிகளை வடிவமைத்துள்ளார். இந்த ஆறு படங்களும் ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆகிறது.





