திருநெல்வேலி, ரா ரா, தலைவா, ஆவிக் குமார், உத்தரவு மகாராஜா உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகர் உதயா. இவர் தயாரிப்பாளர் ஏ எல் அழகப்பனின் மகன் என்பதும், திரைப்பட இயக்குனர் ஏஎல் விஜயின் சகோதரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.தற்போது தென்னிந்திய நடிகர் சங்கத்தில் உறுப்பினராக இருந்த நடிகர் உதயா நிரந்தரமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களை இன்று சந்தித்த நடிகர் உதயா கூறியதாவது, தென்னிந்திய நடிகர் சங்கம் ஒரு பாரம்பரியமான சங்கம். இதில் உறுப்பினராக இருந்ததே எனக்கு பெருமைதான். பாண்டவர் அணி உருவானபோது நான் நடிகர் சங்க செயற்குழு உறுப்பினராக போட்டியிட்டு ஜெயித்தேன். அதன்பின் சங்கரதாஸ் அணி உருவானபோது, அதில் துணைத் தலைவராக போட்டியிட்டேன். அந்த தேர்தலில் பல குளறுபடிகள் நடந்தன.
அதன்பின் நடந்த நடிகர் சங்க செயற்குழு கூட்டத்தில், நானும் பங்கேற்றேன். அப்போது நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால் எங்களை, வைரஸ் என்று விமர்சித்தார். விஜயகாந்த் கடனை அடைத்துதான் நடிகர் சங்கத்தை மீட்டார். திரும்பவும் கடன் வாங்கணுமா என்றுதான் கேட்டேன். அதற்காக என்னை ஆறு மாதம் சங்கத்தில் இருந்து தற்காலிகமாக நீக்கினார்கள்.
இந்த தற்காலிக நீக்கம் ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் தொடர்ந்தது.. இப்போது நிரந்தரமாக என்னை சங்கத்தில் இருந்து நீக்கி உள்ளனர். எதுவுமே முறைப்படி நடக்கவில்லை. இவர்கள் செய்வதை எல்லாம் பார்க்கும்போது சரத்குமார், ராதாரவியே பரவாயில்லை என்றுதான் தோன்றுகிறது. தேர்தலை சந்திக்க தைரியம் இல்லாமல் தான் 3 வருடங்கள் நீட்டிப்பு செய்திருக்கிறார்கள். கண்டிப்பாக தேர்தலை நடத்தியாக வேண்டும்.
நடிகர் நாசர் சங்கத் தலைவராக உள்ளார். ஆனால் அவரால் எதுவுமே பேச முடியவில்லை. சங்கமே செயல்படாமல் உள்ளது. தேர்தல் வேண்டும் என்று சொன்னால் சொல்கிற அனைவரையும் நீக்கம் செய்வார்களா, நான் என்னை நீக்கம் செய்வதற்கு விளக்கம் கேட்டேன். அதற்கு அவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்கிறார்கள். நான் மன்னிப்பு கேட்கும் அளவிற்கு என்ன தவறு செய்தேன்.
நல்லவர்கள் உள்ளே வந்து கெட்டவர்கள் வெளியே போய்விட்டார்கள் என்று விஷால் கூறுகிறார். ஆனால் அது யார் நல்லவர்கள் கெட்டவர்கள் என்று கூறவில்லை. விஷால் தொடர்ந்து காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுகிறார். என்னைப் பொருத்த வரை நடிகர் சங்கம் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்பதே என் ஆசை என்று நடிகர் உதயா கூறியிருக்கிறார். இது தற்போது வைரலாகி வருகிறது.





