ஜெயிலர் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் வேட்டையன். இந்த படம் லைகா புரடக்சன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ளது. வேட்டையன் படத்தை ஜெய்பீம் இயக்குனர் தசெ ஞானவேல் டைரக்ட் செய்து இருக்கிறார். இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்து இருக்கிறார். நடிகர் ரஜினிகாந்த் இந்த படத்தில் என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் ஆக நடித்திருக்கிறார்.
வேட்டையன் படத்தில் கேமியோ ரோலில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவருக்கு நடிகர் பிரகாஷ்ராஜ் பின்னணி குரல் கொடுத்திருக்கிறார். மேலும் இந்த படத்தில் மஞ்சு வாரியார், அபிராமி, ரோகிணி, ரித்திகா சிங், துஷாரா விஜயன், ராணா டகுபதி, பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 20ம் தேதி சென்னை நேரு இண்டோர் ஸ்டேடியத்தில் மிகப் பிரமாண்டமாக நடந்தது. இந்த படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் பலத்த ஆர்வமும், எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ள நிலையில் வருகிற அக்டோபர் 10ம் தேதி வேட்டையன் படம் ரிலீஸ் ஆகிறது என்று ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டது.
இதற்கிடையே ரஜினிகாந்த் கடந்த பல ஆண்டுகளாக 2 கேரக்டர்களில் மட்டுமே படங்களில் நடித்து வருகிறார். உதாரணமாக கபாலி, காலா, பேட்ட, கூலி படங்களில் தாதா கேரக்டரில் நடித்தார். பிறகு தர்பார், ஜெயிலர், வேட்டையன் போன்ற படங்களில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இப்படி 2 கேரக்டர்களை விட்டால் அவருக்கு நடிக்க வேறு வழியே இல்லை என்றும் கடுமையான விமர்சனமும் எழுந்துள்ளது.
வேட்டையன் படம் குறித்து படத்தின் இயக்குனர் தசெ ஞானவேல் கூறியதாவது, நான் ரஜினிக்காக இந்த படத்தில் சில மாற்றங்கள் செய்தால் அது சரியாக வராது. அதுபோல் வேட்டையன் படத்திற்காக ரஜினி அவர் குணத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் நானும் நினைக்க கூடாது.
இன்று முன்னணி நடிகராக ரஜினிகாந்த் உச்சத்தில் இருக்க முக்கிய காரணம் அவரது இயல்பு, ஸ்டைல் என எல்லாம் சேர்ந்ததுதான். அந்த வகையில் ரஜினியின் இமேஜ், அவர் கடின உழைப்பால் உருவாக்கிய சாம்ராஜ்யத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் இந்த படத்தை எடுத்துள்ளேன் என்று தசெ ஞானவேல் கூறியிருக்கிறார். அதாவது படத்தின் கதைக்காக ரஜினியை மாற்றி நடிக்க வைக்கும் ஒரு காம்ப்ரமைஸ் நான் செய்துக்கொள்ளவில்லை என்று வெளிப்படையாக அவர் கூறியிருப்பது வைரலாகி வருகிறது.





