இந்த ஆண்டு மட்டும் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மூன்று திரைப்படங்கள் வெளியாகி உள்ளன. கொரோனா காலகட்டத்திற்கு பின்பு பாலிவுட் திரை உலகம் அதல பாதாளத்திற்கு சென்றது. எந்த ஒரு வெற்றி படமும் கொடுக்க முடியாமல் அதன் இயக்குனர்கள் திண்டாடி வந்தனர். இந்த சமயத்தில் தான், கடந்த ஜனவரி மாதம் ஷாருக் கான் நடிப்பில் பதான் திரைப்படம் வெளியானது.
தீபிகா படுகோன் கதாநாயகியாக நடிக்க, இன்னொரு நட்சத்திரம் ஆன சல்மான் கானும் படத்தில் நடித்திருந்தார். மிகப்பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், எதிர்பார்த்தது போலவே சக்கை போடு போட்டது. அதுமட்டுமில்லாமல் துவண்டு கிடந்த பாலிவுட் திரையுலகத்திற்கு, புதுவித பாய்ச்சலை கொடுத்தது இந்த திரைப்படம். கிட்டத்தட்ட 1000 கோடி ரூபாய்க்கும் மேல் பதான் திரைப்படம் வசூல் ஆனதால், பலரும் ஷாருக்கான் கொண்டாடினார்கள்.
இப்படியான சூழலில், அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த ஜவான் திரைப்படம் வெளியானது. வழக்கமாக பல திரைப்படங்களில் இருந்து காட்சிகளை சுட்டு அட்லி எடுத்திருந்த இந்த திரைப்படம், இந்தி திரை உலகத்திற்கு புதிதாக இருந்ததாலோ என்னவோ அங்கு ஜவான் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தொடர்ந்து இரண்டாவது திரைப்படமாக ஜவானும், ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் ஈட்டியது.
இதைத்தொடர்ந்து, இந்த ஆண்டில் மூன்றாவது திரைப்படம் ஆக ஷாருக்கானின் டங்கி படம் வெளியாகி உள்ளது. 3 இடியட்ஸ், பிகே உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய ராஜ்குமார் ஹிலானிதான் இந்த படத்தின் இயக்குனர். இதில், டாப்ஸி ஹீரோயினாக நடிக்க மிகப்பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இந்த திரைப்படம் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.
அதேசமயம் ஷாருக்கான் படத்திற்கு போட்டியாக பிரபாஸ் நடிப்பில் சலார் வெளியாகி உள்ளது. பாகுபலிக்கு பிறகு நடிகர் பிரபாஸிற்கு எந்த திரைப்படமும் வெற்றி திரைப்படங்களாக அமையவில்லை. சாஹோ, ராதே ஷ்யாம், ஆதி புருஷ் ஆகிய திரைப்படங்கள் படுதோல்வியை சந்தித்தன. இப்படியான சூழலில்தான் அவர் கே ஜி எஃப் இயக்குனர் பிரசாந்த் நீலுடன் சலார் படத்தில் இணைந்து பணிபுரிந்துள்ளார். இதில் பிரித்விராஜ், ஸ்ருதிஹாசன் ஆகியோர் நடித்துள்ளனர்.
பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளிவந்த இந்த திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. ஆக்சன் காட்சிகளில் படம் தூள் கிளப்பி இருந்தாலும், இரண்டாம் பாதி அவ்வளவாக நன்றாக இல்லை என பலரும் கூறி வருகின்றனர். இருப்பினும் இந்த விமர்சனங்கள் சலார் படத்தின் வசூலை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. ஒரே நாளில் 178 கோடியே 70 லட்சம் ரூபாயை அந்த படம் வசூல் செய்திருக்கிறது. அதேசமயம் விமர்சன ரீதியாக டங்கி திரைப்படம் வரவேற்பு பெற்றாலும் ஒரே நாளில் 58 கோடி ரூபாய் மட்டுமே வசூல் ஈட்டி உள்ளது. இதற்கு ஒரே காரணம் டங்கி திரைப்படம் பான் இந்தியா படமாக இல்லாமல் இருப்பதுதான் என சினிமா விமர்சனங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.





