நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்தும், இனி சினிமா வேண்டாம் என அரசியலுக்குள் வந்துவிட்டார். இப்போது தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி, கடந்த மாதம் கட்சிக்கொடி மற்றும் கட்சிப் பாடல் போன்றவற்றை அறிமுகம் செய்துவைத்தார். வருகிற அக்டோபர் 27ம் தேதி விக்கிரவாண்டியில் தனது கட்சியில் முதல் அரசியல் மாநாட்டை நடத்துகிறார்.
நடிகர் விஜய் அரசியலுக்கு வருவார் என்று ஆரம்பத்தில் யூகமாக சொல்லப்பட்ட ஒரு விஷயம் பிறகு உண்மையாகி விட்டது. ஆனால் மிக நீண்ட காலமாக தமிழகத்தில் அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரஜினிகாந்த், கடைசி வரை பில்டப் மட்டுமே செய்துவிட்டு அரசியல் கோதாவில் குதிக்காமல் சாமர்த்தியமாக எஸ்கேப் ஆகி விட்டார்.
ஆனால் அரசியலுக்கு வந்துள்ள விஜய், நிச்சயமாக தமிழகத்தின் முதல்வர் ஆவார் என்றும், திமுக, அதிமுக என மாறி மாறி ஆட்சி செய்துவரும் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக இருப்பார் என்றும் ரசிகர்கள் தரப்பில் எதிர்பார்ப்பு இருந்தாலும், பொதுவான மக்களும் ஆதரித்தால் மட்டுமே விஜய், தமிழக முதல்வராகும் வாய்ப்பு உருவாகும்.
ஆனால் திமுக, அதிமுக என பாரம்பரியமான கட்சிகளில் இருப்பவர்கள், இதுவரை திமுக, அதிமுக என மாறி மாறி ஓட்டுப் போட்டவர்கள் எல்லாம் அவ்வளவு எளிதாக, உடனடியாக விஜய் கட்சிக்கு ஓட்டுப் போட மாட்டார்கள் என்ற கருத்தில் மறுக்கவே முடியாத உண்மை இருக்கிறது. மக்கள் விரும்பும் நடிகர் என்பதை தவிர, அரசியல்வாதியாக விஜயை மக்கள் ஏற்க என்ன அவரிடம் இருக்கிறது என்ற கேள்வியும் இருந்து வருகிறது.
நடிப்பில், கமல்ஹாசனை விட பெரிய நடிகர் விஜய் கிடையாது. ஆனால் அவரே இப்போது திமுகவுக்கு ஜால்ரா அடித்து வருகிறார். தனித்து அவரால் சாதிக்க முடியவில்லை. அதே போல் தமிழக அரசியலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய விஜயகாந்தும் ஒரு கட்டத்தில், கூட்டணி கட்சி தயவில்தான் தேர்தலை சந்தித்து வெற்றி பெற்றார்.
இதுகுறித்து மெட்டி ஒலி சீரியலில் நடிகராக அறிமுகமாகி, பிறகு திரைப்பட நடிகராக வலம் வரும் போஸ் வெங்கட் ஒரு நேர்காணலில் கூறியதாவது, நடிகர்கள் கமல், விஜயகாந்த் போன்றவர்களை மக்கள் பெரிய அளவில் எதிர்பார்த்தனர். ஒரு கட்டத்தில் அவர்களே கூட்டணி கட்சிகளுக்குள் அடங்கி விட்டனர். இதை எல்லாம் எளிதில் உடைத்துவிட முடியாது. திமுக, அதிமுக கட்சியினர் விஜய் கட்சியில் சேர மாட்டார்கள். இளைஞர்கள் மட்டுமே வருவர். அதிமுக திமுக ஓட்டுவங்கி ஸ்ட்ராங்காக உள்ளது. விஜய் தொடர்ந்து அரசியலில் பயணித்து அவரது கொள்கை, கட்சியின் திட்டம் இணக்கமாக இருந்தால் எதிர்காலத்தில் அவரது கனவு பலிக்கலாம், என்று நடிகர் போஸ்வெங்கட் கூறியிருக்கிறார்.





