இயக்குனர் கே பாலச்சந்தர் இயக்கிய அழகன் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியவர் நடிகை மதுபாலா. இப்போது மது என அழைக்கப்படுகிறார். பாலிவுட் நடிகை ஹேமமாலினி உறவினர். தமிழில் மணிரத்னம் இயக்கிய ரோஜா ஷங்கர் இயக்கிய ஜெண்டில்மேன் படங்களில் நடித்து மதுபாலா பிரபலமானார்.
தமிழில் மட்டுமின்றி இந்தி தெலுங்கு கன்னடம் மலையாளம் என பிற மொழி படங்களில் மது நடித்திருக்கிறார். இந்தி சீரியல்கள் வெப் தொடர்களிலும் நடித்து வரும் நடிகை மதுவுக்கு 2 மகள்கள் உள்ளன. இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற நடிகை மது, நானா படேகருடன் நடித்த அனுபவம் குறித்து வெளிப்படையாக ஒரு தகவலை கூறியிருக்கிறார்.
கடந்த 1997ம் ஆண்டில் வெளிவந்த நடிகர் நானா படேகரும் மதுவும் நடித்த யஷ்வந்த் என்ற பாலிவுட் படம் சூப்பர் ஹிட் ஆனது. அந்த படம் குறித்து நடிகை மது அந்த நேர்காணலில் கூறியதாவது, அந்த படப்பிடிப்பு நடந்த போது ஒரு காட்சியில் நான் அழவேண்டும். அதற்காக கிளிசரின் போடப் போனேன். ஆனால் நானே படேகர் கிளிசரின் போடாதீங்க. இயற்கையாகவே கண்ணில் கண்ணீர் வரவேண்டும் என்றார்.
நான் முயற்சி செய்து பார்த்தும் கூட கண்ணீர் வரவே இல்லை. அதைப் பார்த்த நானா படேகர் பளார் என்று என் கன்னத்தில் அறைந்து விட்டார். உடனே கண்ணீர் தானாக வந்துவிட்டது. அவர் அப்படி அறைவார் என்று நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. ஒத்திகை பார்த்தபோது அவர் என்னை அறைவது மாதிரி காட்சி இருப்பதாக யாரும் சொல்லவில்லை. அதனால் அவர் அப்படி செய்ததும் நான் அதிர்ச்சி அடைந்தேன்.
மேலும் எனக்கு சட்டுன்னு கோபம் வந்துவிடும். அவர் அறைந்ததும் நான் கோபத்தில் பதிலுக்கு அவரை ஓங்கி அறைந்து விட்டேன். அந்த அறைகிற காட்சி டூப் இல்லை. நிஜமாகவே படப்பிடிப்பில் நடந்தது. அந்த காட்சியை படமாக்க இயக்குனர் அனில் ஒரு முழு நாளை ஒதுக்கி இருந்தார். ஆனால் அவர் எதிர்பார்த்த மாதிரி உடனே வந்து விட்டதால் பாதி நாளிலேயே பேக்கப் சொல்லிவிட்டார்.
நான் நானா படேகரிடம் இருந்துதான் ஆக்டிங் மெத்தேடு கற்றுக் கொண்டேன். அவர் என்னிடம் ஒருபோதும் ரூடாக நடந்து கொண்டது இல்லை. நடிப்பு குறித்து நிறைய கற்றுக் கொடுத்தார். நான் கிளிசரின் பயன்படுத்தினாலோ கேரக்டரில் இருந்து உடனே வெளியே வந்து விட்டாலோ இது வேண்டாம் என்பார். காட்சியை உள் வாங்கி கிளிசரின் இல்லாமல் அழப் பாருங்க மது என்பார். ஒரு படத்தில் நடிக்கும் போது அந்த கேரக்டராவே வாழ வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தவர் நானே படேகர்தான் என்று அந்த நேர்காணலில் நடிகை மது கூறியிருக்கிறார்.





