தமிழ் சினிமாவில் 47 ஆண்டுகளாக இசை சக்கரவா்த்தியாக வாழ்ந்து கொண்டிருப்பவர் இசைஞானி இளையராஜா. அன்னக்கிளி படத்தில் இசையமைப்பாளராக அவரை அறிமுகப்படுத்தியவர் பஞ்சு அருணாசலம். முதல் படத்திலேயே ரசிகர்களை தனது வசீகர இசையால் வசியப்படுத்திய இளையராஜா, இன்றுவரை தன் இசையால் ரசிகர்களை வசப்படுத்தி இருக்கிறார்.
இளையராஜாவின் இசையில் பல ஆயிரம் பாடல்களை பாடியவர் எஸ்பி பாலசுப்ரமணியம். எஸ்பிபி – பி சுசீலா, எஸ்பிபி – எஸ் ஜானகி, எஸ்பிபி – சித்ரா என இந்த கூட்டணியில் இளையராஜா இசையில் ரசிகர்களை மயக்கிய பாடல்கள் பல ஆயிரம் உண்டு. இதுதவிர தனியாக எஸ்பிபி பாடிய பாடல்கள் என்றென்றும் சாகா வரம் பெற்றவையாக இருக்கின்றன.
எஸ்பி பாலசுப்ரமணியம், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். ஆனால் தொற்று குணமான நிலையில் மீண்டும் அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு காலமானார். அவரது மறைவு மிகப்பெரிய சோகத்தை தமிழ் சினிமா துறையிலும், ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியது.
தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பிற மொழிகளிலும் 50 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடிய எஸ்பி பாலசுப்ரமணியத்தை கௌரவிக்கும் விதமாக, சமீபத்தில் தமிழக அரசு எஸ்பிபி வீடு உள்ள நுங்கம்பாக்கம் காம்தார் நகர் பிரதான சாலைக்கு, எஸ்பி பாலசுப்ரமணியம் சாலை என பெயர் வைக்கப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
இந்த அறிவிப்பு, எஸ்பிபியின் நினைவு நாளில் வெளியானது. இதற்கு எஸ்பிபி மகன் எஸ்பிபி சரண் உடனடியாக தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து இசைஞானி இளையராஜாவும், தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் இளையராஜா கூறியிருப்பதாவது, என் நண்பன் பாலுவின் நினைவாக, அவன் வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள சாலைக்கு எஸ்பி பாலசுப்ரமணியம் சாலை என பெயரை மாற்றி வைத்ததற்காக தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழக மக்கள் சார்பிலும், திரையுலகின் சார்பிலும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன், என்று கூறியிருக்கிறார். ஒரு காலகட்டத்தில் என் இசையில் உருவான பாடல்களை எஸ்பிபி தனது இசை நிகழ்ச்சிகளில் பாடக்கூடாது என நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா, எஸ்பிபியின் நட்பை முறித்துக்கொண்டவர். இப்போது அவரே பழைய பாசத்தை மறக்காமல் இப்படி அரசுக்கு நன்றி தெரிவித்திருப்பது வைரலாகி வருகிறது.





