வழக்கமாக சினிமாவில் மார்க்கெட் இழந்து பட வாய்ப்புகளே இல்லாத சூழலில்தான், பலரும் அரசியல் வாழ்க்கையை தேர்வு செய்கின்றனர். ஏனென்றால் இனி சினிமாவில் இருந்து கல்லா கட்ட முடியாது என்பது உறுதியான பிறகு வாய்ப்பிருந்தால் டிவி பக்கம் வருகிறார்கள். அதுவும் சாத்தியப்படாது என்றால் ஏதேனும் அரசியல் கட்சிக்கு தாவி விடுகின்றனர்.
சினிமா நட்சத்திரம் என்ற புகழ் காரணமாக, நட்சத்திர பேச்சாளர்களாக அரசியல் கட்சி பிரசார மேடைகளில் பேசி ஒரு நாளுக்கு ரூ. 25 ஆயிரம் முதல் ரூ. 2 லட்சம் வரை வாங்கிக்கொள்ளும் சில நடிகர், நடிகைகள் இருக்கின்றனர். இதன்மூலமாகவே சில லட்சங்களை அவர்கள் மாத வருமானமாக பெற்று விடுகின்றனர்.
ஆனால் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும்போது அரசியலுக்குள் வந்து விட்டார். இப்படி வருவதற்கு ஒரு பெரிய துணிச்சலும், தைரியமும் வேண்டும் என்பதை யாராலும் மறுக்க முடியாது. ஆனால் அவரால் சாதிக்க முடியுமா, தமிழக முதல்வராக இருக்கையை அவர் நினைப்பது போல் முதல் தேர்தலிலேயே பிடிக்க முடியமா என்பதுதான் இப்போது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.
ஏனெனில் நடிகர் கமல்ஹாசனை, நடிகராக ஏற்றுக்கொண்ட மக்கள் அவரை அரசியல் தலைவராக ஏற்றுக்கொள்ளாமல் புறக்கணித்து விட்டனர். விஜய் டிவி பிக்பாஸ் மேடையை அரசியல் மேடையாக்கி எவ்வளவோ வசனம் எல்லாம் பேசி பார்த்தும் கடைசியில் கமல் இது வேலைக்கு ஆகாது என, திமுக வசமே போய் செட்டிலாகி விட்டார். அவர் தம்பி என்று அழைக்கும் துணை முதல்வர் உதயநிதிதான் அவரது அரசியல் குருவாக இப்போது இருக்கிறார்.
தமிழ் சினிமாவில் 30 ஆண்டுகளுக்கு மேலாக இருக்கிறார் நடிகர் விஜய். ஆனால் அவர் அரசியல் கட்சி ஆரம்பித்த போதும், கட்சி கொடி அறிமுகப்படுத்திய போதும் திரையுலகம் சார்ந்த யாருமே வாழ்த்துகளை சொல்லவில்லை. ஏதோ ஒரு சிலர் வாழ்த்து தெரிவித்தாலும் அதுவும் சம்பிரதாயமாக மட்டுமே இருந்தது. அதுமட்டுமின்றி பெரிய நடிகர்கள் யாருமே அவருக்கு ஆதரவும் தரவில்லை. அவரது கட்சிக்கு வரவும் இல்லை.
ஆனால் உதயநிதி துணை முதல்வர் ஆனதற்கு வாழ்த்துகளை முதல் ஆளாக போட்டி போட்டுக்கொண்டு பதிவு செய்து வருகின்றனர். இதன்மூலம் விஜய்க்கு அவர் சார்ந்துள்ள தமிழ் சினிமா துறையே ஆதரவளிக்கவில்லை என்று தெரிய வருகிறது. புஸ்லி ஆனந்தையும், ரசிகர்களையும் நம்பி தமிழக அரசியல் என்னும் காட்டாற்று வெள்ளத்தில் இறங்கும் விஜய், இரும்பு குதிரையாக கரை ஏறுவாரா, மண் குதிரையாக கரைந்து போவாரா என்பதற்கு 2026 சட்டசபை தேர்தல் முடிவுகள்தான் பதில் சொல்லும்.





