தமிழ் சினிமாவில் எப்போதேனும் அத்தி பூத்தது போல் நல்ல சினிமா படங்கள் வந்து விடுகின்றன. காக்கா முட்டை, குட்நைட், சித்தா, மகாராஜா போன்ற படங்களின் வரிசையில் இப்போது லப்பர் பந்து படமும் இணைந்துள்ளது. இந்த படம் வெளியாகி 12 நாட்கள் ஆன நிலையில் இதுவரை 22 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
பிரின்ஸ் பிக்சர் என்ற தயாரிப்பு நிறுவனம் லப்பர் பந்து படத்தை தயாரித்துள்ளது. கிரிக்கெட் விளையாட்டை மையமாக கொண்ட இந்த படத்தை அறிமுக இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து எழுதி இயக்கி இருக்கிறார். படத்தில் அட்டக்கத்தி தினேஷ், ஹரீஷ் கல்யாண், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, சுவாசிகா, பால சரவணன், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
லப்பர் பந்து படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். தினேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். கடந்த 20ம் தேதி வெளியான லப்பர் பந்து படம் ரசிகர்கள் மத்தியில் பலத்த ஆதரவும், வரவேற்பும் பெற்று வருகிறது. தொடர்ந்து இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருவதால் படத்துக்கு இன்னும் நாளுக்கு நாள் ரசிகர் கூட்டம் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக இயக்குனர் வெற்றிமாறன், இசையமைப்பாளர் இளையராஜா, இயக்குனர் பாரதிராஜா உள்ளிட்ட சிலர் லப்பர் பந்து படத்தை பாராட்டி, படக்குழுவினரை நேரில் சந்தித்தும் குறிப்பிடத்தக்கது. பார்க்கிங் படத்துக்கு பிறகு ஹரீஷ் கல்யாணுக்கு இந்த படம் பெரிய வெற்றிப் படமாக அமைந்துள்ளது.
லப்பர் பந்து படத்தில் இரட்டை நாயகர்களால் ஒருவராக நடித்த ஹரீஷ் கல்யாண் சமீபத்தில் படத்தின் இயக்குனர் தமிழரசன் பச்சமுத்துவுக்கு 3 பவுன் தங்கச் செயினை பரிசாக அளித்துள்ளார். அவர் 3 பவுன் தங்கச் செயினை தமிழரசன் பச்சமுத்து கழுத்தில் அணிவிக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
ஆனால் பார்க்கிங் படம் மூலம் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்ற ஹரீஷ் கல்யாண், தங்க செயினுக்கு பதிலாக இயக்குனர் தமிழரசன் பச்சமுத்துவுக்கு கார் பரிசளித்திருந்தால் இன்னும் வேற லெவலில் இருந்திருக்கும். ஏனென்றால் இப்போதெல்லாம் வெற்றிப் படங்களை தரும் இயக்குனர்களுக்கு கதாநாயகர்களும், தயாரிப்பு நிறுவனங்களும் விலை உயர்ந்த கார்களை பரிசளிப்பது தான் வழக்கமாக இருக்கிறது என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.





