கடந்த 2022ம் ஆண்டில் வெளியான திரைப்படங்களுக்கான 70வது தேசிய திரைப்பட விருதுகள் பற்றிய அறிவிப்பு, கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியானது. இதில் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் உள்ளிட்ட பல தமிழ் படங்கள் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டன.
அதில் சிறந்த நடன இயக்குனர் விருது, நடன இயக்குனர்கள் ஜானி மற்றும் சதீஷ் கிருஷ்ணன் ஆகியோருக்கு திருச்சிற்றம்பலம் படத்தில் இடம்பெற்ற மேகம் கருக்காதா பெண்ணை பெண்ணே என்ற பாடலுக்காக வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.
இதில் ஜானி மாஸ்டர் தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடன இயக்குனராக இருப்பவர். குறிப்பாக ஜெயிலர் படத்தில் இடம்பெற்ற காவாலய்யா பாடல், பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற ரஞ்சிதமே, ஜாலியோ ஜிம்கானா உள்ளிட்ட பல பாடல்களுக்கு நடனம் அமைத்தவர். இவரது நடன அமைப்பில் வெளியான குத்து பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றன.
இந்நிலையில், தன்னிடம் பணிசெய்த நடன பெண் ஒருவரை, ஜானி மாஸ்டர் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக சமீபத்தில், அவர் மீது பாலியல் புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார், கோவாவில் தலைமறைவாய் இருந்த ஜானியை கைது செய்தனர். மைனர் பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக போக்சோ சட்டத்தில் அவர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த சூழலில் மத்திய அரசின் தேசிய விருது வாங்குவதற்காக அவர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி அவருக்கு அக்டோபர் 6ம் தேதி முதல் 11ம் தேதி வரை இடைக்கால ஜாமின் வழங்கி உள்ளார். 70 வது தேசிய விருதுகள் வழங்கும் விழா, டில்லியில் வருகிற 8ம் தேதி செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது. இந்த விழாவில் திரைத்துறை சார்ந்த கலைஞர்கர்களுக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளது.
அந்த விழாவில் போக்சோ சட்டத்தில் கைதாகி, விருதை பெறுவதற்காகவே இடைக்கால ஜாமின் பெற்றுள்ள ஜானிக்கு தேசிய விருது வழங்கலாமா என்ற சர்ச்சை சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதில் பலரும் ஜானிக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து தேசிய விருதுகள் வழங்கும் தேர்வுக்குழு என்ன முடிவெடுக்க போகிறது என்பது குறித்து அறிய பலரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஆனால் பொதுவாக பலரும் போக்சோ சட்டத்தில் கைதான ஒருவருக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருது வழங்காமல், அதை ரத்து செய்ய வேண்டும் என்றே கோரிக்கை விடுத்து வருகின்றனர்.





