ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக சூட்டிங் நடைபெற்ற இந்தியன் 2 திரைப்படம் தற்போது ரிலீசுக்கு தயாராகி உள்ளது. லைக்கா நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார் அனிருத். சங்கர் இயக்கியிருக்கும் இந்த திரைப்படத்தில் ஏராளமானோர் நடித்திருக்கிறார்கள்.
காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர் என மூன்று கதாநாயகிகள் இதில் இடம் பெற்றுள்ளனர். சித்தார்த் பாபி சிம்ஹா சமுத்திரக்கனி உள்ளிட்டோரும் படத்தில் நடித்திருப்பதால் இதன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது. இந்த திரைப்படம் வரும் ஜூலை 12ஆம் தேதி வெளியாவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இதில் நடிகர் சிம்பு, இயக்குனர்கள் லோகேஷ் கனகராஜ், நெல்சன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு முன்னதாக பேசிய சங்கர், படத்தில் கமல்ஹாசன் வரும் காட்சி எல்லாம் அனல் பறக்கும் என்று கூறியிருந்தார்.
இந்தியன் 2 திரைப்படத்திற்காக கமல்ஹாசன் மேக்கப் அணிந்து வந்தபோது, அப்படியே 25 ஆண்டுகளுக்கு முன்பிருந்த கமல்ஹாசனை போல் காட்சியளித்தார். காஜல் அகர்வால் இந்தியன் 2 படத்தில் இல்லை என்றும், அவர் இந்தியன் படத்தின் மூன்றாம் பாகத்தில் தான் உள்ளதாகவும் கூறியிருந்தார். இந்த நிலையில் மேடையில் பேசிய கமல்ஹாசன் பல்வேறு விஷயங்களை பகிர்ந்தார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது,
இரண்டு மூன்று ஆண்டுகளாக இந்தியன் 2 திரைப்படம் சிக்கலில் இருந்த போது, இந்தத் திட்டம் மீண்டும் உயிர்பிக்க உதயநிதி காரணமாக இருந்ததாக தெரிவித்தார். உதய் எங்களுக்கு உதவியது போல், அவருடன் நின்று உதவி செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். மக்கள் கொடுத்துள்ள புதிய பொறுப்பில் உதயநிதி வெற்றி பெற வேண்டும் என்று கூறி இருந்தார்.
தொடர்ந்து மேடையில் இருக்கும் போது இந்தியன் தாத்தா கதாபாத்திரம் குறித்து அவரிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. இதற்கு நக்கலாக பதில் கூறிய கமல்ஹாசன், ஸ்ருதிஹாசன் மனது வைத்திருந்தால் நான் எப்பவோ தாத்தாவாக இருக்கலாம் என்று கூறினார். கமல்ஹாசனின் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தனது ஆசையை உலகநாயகன் வெளிப்படுத்தி இருப்பதாக அவரது ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.





