லைகா புரடக்சன்ஸ் தயாரிப்பில், இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் அஜீத்குமார் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை தொடர்ந்து நடிகர் அஜீத்குமார், இப்போது மார்க் ஆண்டனி பட இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், குட் பேட் அக்லி என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தை, மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் ஐதராபாத்தில் நடந்த நிலையில், தற்போது ஸ்பெயின் நாட்டில் நடந்து வருகிறது. குட் பேட் அக்லி படத்துக்கு மொத்தமாக 110 நாட்கள் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரமாக ஸ்பெயின் நாட்டில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்த படத்தில் கதாநாயகியாக திரிஷா நடிக்கிறார். விடாமுயற்சி படத்திலும் அஜீத் குமாருக்கு திரிஷா தான் ஜோடியாக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பே கிரீடம் என்ற படத்திலும், ஜி என்ற படத்திலும் அஜீத்குமார், திரிஷா ஜோடி இணைந்து நடித்துள்ளது. இந்த படங்களில் ஜி படம் மட்டுமே சரியாக ஓடவில்லை. மற்ற படங்கள் ரசிகர்களின் வரவேற்பை பெற்ற படங்களாக இருந்தன.
குட் பேட் அக்லி படத்தின் கதைப்படி வெளிநாட்டில் எடுக்கப்பட வேண்டிய கதைதான். படத்தின் கதைக்களமே வெளிநாட்டில் நடப்பது போல்தான் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் குறிப்பாக ஸ்பெயின் நாட்டில் இந்த படம் எடுக்கப்பட வேண்டிய அவசியமில்லை. வேறு எந்த நாட்டில் வேண்டுமானாலும் இந்த படத்தை எடுக்கலாம் என்ற ஒரு சூழ்நிலை உள்ளது.
ஆனால் இந்த படத்தை ஸ்பெயின் நாட்டில் எடுப்பதற்கான முக்கிய காரணம் தற்போது தெரிய வந்துள்ளது. அதாவது நடிகர் அஜித்குமார் இப்போது ஸ்பெயின் நாட்டில் நடக்கும் யூரோ மோட்டார்ஸ் கார் பந்தயத்தில் கார் கலந்து கொள்ள இருக்கிறார். இதற்கான பயிற்சிகளை பெறுவதற்காக ஸ்பெயின் நாட்டில் அவர் இருப்பது அவருக்கு உதவியாக இருக்கும். அதனால் அவர் நடித்து வரும் குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பை, ஸ்பெயின் நாட்டுக்கு அஜீத்குமார் மாற்றிக் கொண்டதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து மூத்த சினிமா பத்திரிகையாளர் பிஸ்மி ஒரு வீடியோவில் கூறுகையில், முன்பெல்லாம் கதைக்காக தான் படக்குழுவினர் லொகேஷன் தேர்வு செய்வார்கள். இப்போது படத்தில் நடிக்கும் ஹீரோவுக்காக படத்தின் கதைக்களத்தை, லொகேஷனை தேர்வு செய்து ஷூட்டிங் நடத்துகின்றனர். இது தமிழ் சினிமாவில் மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது என்று கூறி இருக்கிறார். இது தற்போது வைரலாகி வருகிறது.





