ரஜினிகாந்தின் வேட்டையன் திரைப்படம் வரும் பத்தாம் தேதி வெளியாகிறது. இதற்கான ப்ரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே இதன் ட்ரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்றது. ஜெய் பீம் திரைப்படத்தை தொடர்ந்து ஞானவேல் இந்த படத்தை இயக்கியிருக்கிறார்.
இதில் ரஜினிகாந்துடன் இணைந்து அமிதாப் பச்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இதுபோக மலையாள நடிகை மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங், பகத் பாசில், ராணா உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். இதில் மஞ்சு வாரியர் ரஜினிக்கு மனைவியாக வருகிறார்.
இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள மனசிலாயோ பாடல் மிகப்பெரிய அளவில் ஹிட்டானது. அனிருத்தின் துள்ளலான இசையும், தினேஷ் மாஸ்டரின் அற்புதமான நடன அசைவும் பாடலுக்கு உத்வேகமாய் அமைந்தன. அதிலும் குறிப்பாக மஞ்சு வாரியர் ஆடிய நடன அசைவு இணையத்தில் வீடியோவாக வைரலானது.
இந்த திரைப்படம் என்கவுண்டரை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. போலீஸ் அதிகாரியாக வரும் ரஜினிகாந்த், என்கவுண்டர் நியாயம்தான் என்னும் கூற்றில் உறுதியாக இருக்கிறார். அதேசமயம் உயர் அதிகாரியாக வரும் அமிதாப் பச்சன் என்கவுண்டருக்கு எதிரான மனநிலையில் உள்ளார். இந்த ஒற்றைக் கூற்றுதான் படத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என்று கூறப்படுகிறது.
இதுபோக துஷாரா விஜயின் டீச்சர் கதாபாத்திரத்திலும், ரித்திகா சிங் போலீஸ் அதிகாரியாகவும் வருகிறார். படம் வரும் வெள்ளிக்கிழமை வெளியாகும் சூழலில் அதற்கான முன்பதிவு தொடங்கி இருக்கிறது. இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பேசி இருக்கும் ஞானவேல், படப்பிடிப்பு தளத்தில் நடந்த சில சுவாரசியமான தகவல்களை பகிர்ந்திருக்கிறார்.
அமிதாப்பச்சன் முதல் பெஞ்ச் மாணவர். அவரிடம் நாளைக்கான சூட்டிங் பணிகள் குறித்து தெளிவு படுத்தி விட வேண்டும். முக்கியமாக பேப்பரில் ஸ்கிரிப்ட் அனைத்தையும் எழுதி கொடுத்து விட வேண்டும். அதை அந்த நாள் முழுவதும் பிரிப்பேர் செய்து மறுநாள் அசத்தி விடுவார். ஸ்கிரிப்டில் எந்த இடத்தில் இருந்து ஆரம்பித்தாலும் அவர் அதன்படியே செய்து விடுவார். ஆனால் ரஜினிகாந்த் கடைசி பெஞ்ச் ஸ்டூடண்ட். அவரிடம் ஸ்கிரிப்ட் கொடுத்தால் விடுயா பார்த்துக் கொள்ளலாம் என்று தெரிவித்து விடுவார். ஆனால் கேமரா முன்பு நிற்கும் போது, நாம் கூறும் அனைத்தையும் பக்காவாக செய்து விடுவார் என்று தெரிவித்துள்ளார்.





