தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகை நயன்தாரா. தமிழில் ஐயா படம் மூலம் அறிமுகமான நயன்தாரா, தொடர்ந்து முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக மாறினார். ஒரு கட்டத்தில் அவரை மையப்படுத்திய கதைகளில் நடித்து, பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றார்.
கடைசியாக நயன்தாரா நடிப்பில் வெளியான படம் அன்னபூரணி. இது அவரது 75வது படமாக இருந்தது. தமிழில் ஒரு படத்தில் நடிக்க அதிகபட்சமாக ரூ. 12 கோடி சம்பளம் வாங்கும் முன்னணி நடிகையாக நயன்தாரா இருக்கிறார். மண்ணாங்கட்டி உள்ளிட்ட சில படங்களில் நடிக்க அவர் கமிட் ஆகி உள்ளார். தமிழ் சினிமாவில் சொந்தமாக விமானம் நயன்தாராவிடம் மட்டுமே உள்ளது.
நடிகை நயன்தாராவுக்கும், இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் நானும் ரவுடிதான் என்ற படத்தில் நடித்த போது காதல் ஏற்பட்டது. பிறகு 7 ஆண்டுகளுக்கு மேல் அவர்களது காதல் நீடித்த நிலையில், கடந்த 2002ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். சென்னை அருகே மகாபலிபுரத்தில் உள்ள தனியார் ரிச்சார்ட் ஒன்றில் அவர்களது திருமணம் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்தி நடிகர் ஷாருக்கான், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட முக்கிய சினிமா பிரபலங்கள் இந்த திருமண நிகழ்வில் பங்கேற்றனர்.
இந்த திருமண விழாவை, பிரபலமான ஓடிடி தளத்தில் வெளியிட அப்போதே பல கோடி ரூபாய்க்கு நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் திட்டமிட்டு விலை பேசி முடித்து விட்டதாக ஒரு தகவல் வெளியானது. அதற்காக இந்த திருமண விழாவை, திரைப்பட இயக்குனர் கௌதம் மேனன் தலைமையில் படக் குழுவினர் சூட்டிங் செய்ததாகவும் சொல்லப்பட்டது. வழக்கமாக சினிமாவில் நடித்துதான் நடிகர்கள் சம்பாதிப்பார்கள், இப்படி திருமண வீடியோவை வெளியிட்டும் கூட கோடிக்கணக்கில் சம்பாதிக்க முடியுமா என்று ரசிகர்கள் ஆச்சரியப்பட்டனர்.
ஆனால் நயன்தாரா, விக்கி திருமணம் முடிந்து கடந்த 2 ஆண்டுகளாக அவர்களது திருமண வீடியோ வெளியாகவில்லை. இதனால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். அந்த திருமண வீடியோவை வெளியிடும் உரிமையை வாங்கி இருந்த நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனம் அது குறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. என்ன காரணத்தால், 2 ஆணடுகளாக நயன் – விக்கி திருமண வீடியோ வெளியாகவில்லை என்ற பலரும் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வந்தனர்.
அதற்கு பதில் தரும் விதமாக, இப்போது மிக விரைவில் நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமண வீடியோ வெளியாகும் என்று நெட்பிளிக்ஸ் நிறுவனம் தங்களது தளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நயன்தாரா பியான்ட் த பேரி டேல் என்ற தலைப்பில் 1 மணி நேரம் 21 நிமிடங்கள் ஓடக்கூடிய டாக்குமெண்டரி படமாக அந்த திருமண வீடியோ ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. மிக விரைவில் அந்த வீடியோ வெளியாகும் நாள் குறித்த அறிவிப்பை நெட்பிளிக்ஸ் தளம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





