தமிழ் சினிமாவில் எப்போதுமே ரசிகர்களின் அதிக வரவேற்பை பெற்ற நடிகராக இருப்பவர் சியான் விக்ரம். நடிகர் கமலுக்கு அடுத்தப்படியாக தனது கேரக்டருக்காக அதிகளவில் மெனக்கெட்டு உடலை வருத்திக்கொண்டு நடிக்கும் சிறந்த கலைஞர். எந்த கேரக்டர் என்றாலும் பிசிறு தட்டாத நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தும் ஒரு அற்புதமான நடிகர்.
கடந்த ஆண்டில் சியான் விக்ரம் நடித்த தங்கலான் படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது. ஆனால் விக்ரம் நடிப்பு அழுத்தமாக இருந்தும் படத்தின் கதை திரைக்கதையில் இயக்குனர் பா ரஞ்சித் சொதப்பி விட்டதால், தங்கலான் படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.
சேதுபதி பண்ணையாரும் பத்மினியும் சித்தா போன்ற படங்களை இயக்கியவர் அருண்குமார். இந்த படங்களைத் தொடர்ந்து அருண் குமார் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்த படம் வீர தீர சூரன் 2. இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடித்திருந்தார். வில்லனாக எஸ்ஜே சூர்யா நடித்திருக்கிறார்.
ஜீவி பிரகாஷ்குமார் இசையமைப்பில் உருவான வீர தீர சூரன் படம், கடந்த மார்ச் 27ம் தேதி வெளியானது. இந்த படம் இதுவரை ரூ. 70 கோடி வரை உலகளவில் வசூலித்தது. இன்னும் இந்த படம் பெரிய வசூலை அடையும் என்று எதிர்பார்த்த நிலையில் நடிகர் அஜீத்குமார் நடித்த குட் பேட் அக்லி படம் கடந்த 10ம் தேதி வெளியானதால், விக்ரம் நடித்த படத்துக்கு ரசிகர்கள் கூட்டம் வராமல் வசூல் வெகுவாக குறைந்துவிட்டது.
அதே நேரத்தில் வீர தீர சூரன் 2 படத்துக்காக நடிகர் விக்ரம் தமிழ்நாடு கேரளா ஆந்திரா மற்றும் டெல்லி மும்பை போன்ற முக்கிய நகரங்களுக்கு நேரில் சென்று பிரமோசன் செய்தார். குறிப்பாக தமிழ்நாட்டில் பல பகுதிகளுக்கு நேரில் சென்று வீர தீர சூரன் 2 படம் திரையிடப்பட்ட தியேட்டர்களுக்கு நேரில் விசிட் அடித்து ரசிகர்களை சந்தித்து படத்தை பிரமோட் செய்தார்.
எனினும் எதிர்பார்த்த அளவுக்கு வீர தீர சூரன் 2 படம் ரூ. 100 கோடி வசூலை எட்டவில்லை. என்றாலும் இந்த படம் ஒரு நாள் இரவில் நடக்கும் வித்யாசமான கதைக்களத்தில் உருவான ரசிகர்கள் ரசிககும்படியான ஒரு படமாகவே இருந்தது. இதையடுத்து அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வருகிற 24ம் தேதி வீர தீர சூரன் 2 படம் வெளியாக உள்ளது. இதையடுத்து வீர தீர சூரன் படத்தின் முதல் பாகம் எப்போது வரும் என்று ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர்.





