தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் விஜய். இப்போது தனது 69வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை டைரக்டர் எச் வினோத் இயக்குகிறார். கேரள மாநிலம் பையனூரில் தளபதி 69 படத்தின் படப்பிடிப்பு பாடல் காட்சியுடன் கடந்த ஒரு வாரமாக நடந்து வருகிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இவர் ஏற்கனவே பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர்.
நடிகராக இருக்கும் போதே மக்களின் அதிக கவனம் பெற்ற நடிகர் விஜய், இப்போது தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியின் தலைவராகவும் இருப்பதால் அவரது ஒவ்வொரு செயல்பாடும் அதிக கவனம் பெற்று வருகிறது. அதே நேரத்தில் அதை பலரும் விமர்சிக்கவும் செய்கின்றனர். கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற தனது கட்சியின் பெயரை அறிவித்த நடிகர் விஜய், ஆகஸ்ட் மாதம் 22ம் தேதி தனது கட்சி கொடியை அறிமுகப்படுத்தினார். மேலும் கட்சி பாடல் ஒன்றையும் அவர் அன்று வெளியிட்டார்.
நடிகர் விஜய் வருகிற 27ம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள விசாலை என்னும் கிராமத்தில் தனது கட்சியின் முதல் அரசியல் மாநில மாநாட்டை நடத்துகிறார். அதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இந்த மாநாட்டில் 1.5 லட்சத்துக்கு அதிகமான மக்கள் பங்கேற்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அதற்கான வாகன போக்குவரத்து, பார்க்கிங், உணவு, குடிநீர், கழிப்பிடம், மருத்துவ உதவி பல்வேறு ஏற்பாடுகளை கட்சியினர் செய்து வருகின்றனர்.
இதற்கிடையே நடிகர் விஜய் வழக்கமாக பொதுத்தேர்வு எழுதும் மாணவ மாணவியருக்கும், விசேஷ பண்டிகை நாட்களில் தமிழக மக்களுக்கும் வாழ்த்துகளை தெரிவிப்பது வழக்கம். அந்த வகையில் நடிகர் விஜய் தமிழ் புத்தாண்டு மற்றும் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை என்ற விமர்சனம் வந்தது. திமுக போலவே விஜயும் வாழ்த்து தெரிவிப்பதில் இந்துக்கள் பண்டிகையை புறக்கணிக்கிறார் என்ற ஒரு குற்றச்சாட்டும் விஜய் மீது எழுந்தது.
இதையடுத்து நடிகர் விஜய் தற்போது ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜைக்கு நேற்று வாழ்த்துகளை தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருந்தார். அந்த வாழ்த்து செய்தியில், தொழில் வளத்தில் தொடர்ந்து முன்னேறுவதற்கு ஆதாரமாக விளங்கும் தொழில் கருவிகளையும், பயன்படுத்தும் வாகனங்களையும் அறிவை போதிக்கும் புத்தகங்களையும் வணங்கி வழிபடும் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை விஜயதசமி ஆகிய திருநாள்களில் நீங்கள் மேற்கொள்ளும் அனைத்து புதிய முயற்சிகளும் வெற்றி பெற இனிய வாழ்த்துக்கள் என்று விஜய் பதிவிட்டுள்ளார்.
கடந்த முறை தமிழ் புத்தாண்டு, விநாயகர் சதுர்த்திக்கு தவெக கட்சித் தலைவராக விஜய் வாழ்த்துகள் சொல்லவில்லை என்ற விமர்சனம் எழுந்ததால் தான், இந்த முறை ஆயுத பூஜைக்கு விஜய் வாழ்த்துகளை தானாக முன்வந்து சொல்லியிருக்கிறார் என்று ஒரு தரப்பினர் விமர்சித்து வருகின்றனர். எதை செய்தாலும் அதில் குற்றம் கண்டுபிடித்தால் எப்படி என்று விஜய் ரசிகர்களும், தவெக கட்சி தொண்டர்களும் கோபமாக இதற்கு பதில் கமெண்ட் செய்து வருகின்றனர்.





