தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சிவகார்த்திகேயன். இந்த ஆண்டின் துவக்கத்தில் அவரது நடிப்பில் வெளிவந்த படம் அயலான். இன்று நேற்று நாளை பட இயக்குனர் திருப்பூரைச் சேர்ந்த ரவிக்குமார் இயக்கிய இந்த படம் பெரிய அளவில் ரசிகர் மத்தியில் வரவேற்பை பெறவில்லை.
இதைத்தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து வெளிவர உள்ள படம் அமரன். இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார். நடிகர் கமல்ஹாசனின் சொந்த பட தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம், அமரன் படத்தை தயாரித்துள்ளது. இதில் நடிகர் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடித்திருக்கிறார்.
தமிழகத்தைச் சேர்ந்த மறைந்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை கதையை, கதைக்களமாக கொண்டு அமரன் படம் உருவாக்கப்பட்டுள்ளது. வருகிற தீபாவளிக்கு அமரன் படம் ரிலீஸ் செய்யப்படுகிறது. இதையொட்டி படத்தின் பிரமோ நிகழ்ச்சிகளில் தொடர்ந்து அமரன் படக்குழுவினர் பங்கேற்று வருகின்றனர்.
கடந்த சில வாரங்களாக சென்னை, துபாய், சிங்கப்பூர், அமெரிக்கா உள்ளிட்ட சில வெளிநாடுகளிலும் அமரன் படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி, இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டு வருகிறார்கள். இதைத் தொடர்ந்து அமரன் படத்தில் இசை வெளியீட்டு விழா நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
வருகிற 18ம் தேதி அமரன் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற உள்ளது. சென்னையில் உள்ள சாய்ராம் கல்லூரியில் இந்த விழாவிற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்த விழாவில் நடிகர் சிலம்பரசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ராஜ்குமார் பிலிம்ஸ் தயாரிப்பில் நடிகர் சிம்பு 48வது படத்தில் நடிக்க இருந்தார்.
ஆனால் பட்ஜெட் காரணமாக அந்த படம் கைவிடப்பட்டது அதைத் தொடர்ந்து தான் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் படம் உருவானது. அதேபோல் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசனுடன் இணைந்து தக்லைப் படத்தில் சிம்பு இணைந்து நடித்தார். தற்போது ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்துள்ள அமரன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில், நடிகர் சிலம்பரசன் கலந்து கொள்வது உறுதியாகி உள்ளது. இது சிம்பு ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.





