தமிழ் சினிமாவுக்கு கிடைத்த பொக்கிஷ மனிதர்களில் ஒருவர் நடிகர் விஜயகாந்த். ரஜினி கமலுக்கு அடுத்த நிலையில் இருந்த நடிகர் விஜயகாந்த் தமிழ் சினிமாத் துறைக்கு ஒரு முக்கிய தூணாக இருந்தார். நல்ல மனிதராக பல உதவிகளை செய்தார். தனது பிறந்த நாளில் ஏழை மக்களுக்கு பல நலத்திட்ட உதவிகளை வழங்கினார். கல்வி உதவிகளை செய்தார்.
விஜயகாந்த் தென்னிந்திய நடிகர் சங்க தலைவராக இருந்தபோது, நடிகர் சங்க கடனை அடைப்பதற்காக சிங்கப்பூர், மலேசியா, துபாய் போன்ற வெளிநாடுகளில் நட்சத்திர கலை இரவு நடத்தி பல கோடி ரூபாய் வருமானம் ஈட்டினார். ரஜினிகாந்த் கமல்ஹாசன் போன்ற பெரிய நடிகர்களை எல்லாம் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வைத்தார். நடிகர் சங்க கடனை அடைத்தது மட்டுமின்றி 1.75 கோடி சங்கத்தின் வளர்ச்சிக்கான இருப்பாகவும் வைத்தார்.
ஆனால் இப்போது மீண்டும் நடிகர் சங்கம் கடனில் தத்தளிக்கிறது. நடிகர் சங்க கட்டிடத்தை கட்ட முடியாமல் தவிக்கிறது. விஜயகாந்த் செய்ததை போலவே மீண்டும் வெளிநாடுகளில் நட்சத்திர கலை இரவு நடத்தி, பல கோடி ரூபாய் வருமானம் ஈட்டி அதன் மூலம் நடிகர் சங்க கடனை அடைக்கவும், நடிகர் சங்க கட்டிடத்தை கட்டுமான பணியை முடிக்கவும் இப்போது உள்ள நடிகர் சங்க நிர்வாகிகளான நாசர், விஷால், கார்த்தி போன்றவர்கள் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் விஜயகாந்த் சினிமாவில் மட்டுமின்றி நிஜ வாழ்விலும் ஒரு சிறந்த மனிதராக இருந்தவர். தேமுதிக என்ற அரசியல் கட்சியை துவக்கி தமிழ்நாட்டு அரசியலில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியவர். அவரது மறைவுக்குப் பிறகு இப்போது அந்த கட்சியை அவரது மனைவி பிரேமலதா நடத்தி வருகிறார். அவரது மூத்த மகன் விஜய பிரபாகரன் கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்து கட்சியை வழிநடத்துகிறார்.
விஜயகாந்த் இளைய மகன் சண்முக பாண்டியன் சினிமாவில் நடிகராக வளர்ந்து வருகிறார். ஏற்கனவே அவர் மதுரவீரன், படைத்தலைவன் ஆகிய படங்களில் நடித்த நிலையில் தற்போது சண்முக பாண்டியன், இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் கொம்பு சீவி என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படம் நிச்சயமாக அவருக்கு மிகப்பெரிய ஒரு வெற்றி படமாகவும் நடிகர் விஜயகாந்த் மகன் என்ற பெருமையை சொல்லும் படமாகவும் இருக்கும் என்று கூறப்படுகிறது.
மதுரை, தேனி மாவட்டங்கள் பிரிக்கப்படாமல் ஒருங்கிணைந்த மாவட்டமாக இருந்த அந்த காலகட்டத்தில் நடந்த சம்பவங்களை கொண்ட படம்தான் இது. உசிலம்பட்டியில் இந்த கதை நடக்கிறது. மாவட்ட நிர்வாகம் 5 ஊர்களுக்கு தண்ணீர் வழங்கும் நிலையில், ஒரு ஊருக்கு மட்டும் தண்ணீர் வழங்க தடை விதிக்கிறது. அதற்கு காரணம் அந்த ஊரில் நடக்கும் பலவிதமான அராஜக செயல்கள், சட்ட விரோத செயல்கள்தான். அதிக குற்றங்கள் நடக்கும் நிலையில் அந்த ஊருக்கு தண்ணீர் வராமல் ஒரு ஊரையே புறக்கணிக்கிறது. இப்படிப்பட்ட ஒரு கதையில் சண்முக பாண்டியன் நடிப்பது, ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.





