விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 8 கடந்த 6ம் தேதி துவங்கி 12 நாட்களாக நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். முதல் வாரத்தில் பேட்மேன் ரவீந்தர் வெளியேற்றப்பட்ட நிலையில், இந்த 2வது வாரத்தில் வெளியேறப் போகும் போட்டியாளர் யார் என்பதில் பரபரப்பு நீடித்து வருகிறது. ரஞ்சித் அல்லது ஜாக்குலின் வெளியேற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்த சீசனிலும் வழக்கம்போல் பிக்பாஸ் வீட்டுக்குள் போட்டியாளர்களுக்குள் சண்டை சச்சரவுகள் அதிகரித்துள்ளது. வாக்குவாதம், பிரச்சனைகளும் அதற்கு போட்டியாளர்கள் காட்டும் கோபதாபங்களும் நிகழ்ச்சியை சுவாரசியமாக கொண்டு செல்கிறது. தமிழில் மட்டுமின்றி பிக் பாஸ் நிகழ்ச்சி இந்தியில் 18 ஆண்டுகளாக நடந்து வருகிறது.
அதே போல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பிற மொழிகளிலும் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடர்ந்து ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில் துவங்கிய கன்னடம் பிக்பாஸ் நிகழ்ச்சியில், போட்டியாளர்களுக்கு சொர்க்கமும் நரகமும் என்ற ஒரு டாஸ்க் நடத்தப்பட்டது. இதில் நரகத்திற்கு செல்லும் போட்டியாளர்களுக்கு ஜெயில் செட்டப் ஒன்றும் உருவாக்கப்பட்டது.
ஆனால் டாஸ்க் என்ற பெயரில் உருவாக்கப்பட்ட செட்டப் ஜெயிலில், எந்தவிதமான அடிப்படை வசதிகளும் செய்யாமல் குறிப்பாக அதற்குள் அடைக்கப்பட்டிருந்த பெண் போட்டியாளர்கள் மிகவும் அவதிப்பட்டுள்ளனர். அவர்கள் பல துன்பங்கள், நெருக்கடிகளை சந்தித்ததை பிக்பாஸ் பார்வையாளர்கள் பார்த்து பதறியுள்ளனர். இதுகுறித்து கர்நாடக மாநில மகளிர் ஆணையம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் டாஸ்க் என்ற பெயரில் இப்படி பெண்கள் துன்புறுத்தப்படுவதற்கு எதிர்ப்பு குரல் எழுப்பியுள்ளது.
மேலும் கும்பலக்காடு போலீஸ் ஸ்டேஷனில் இதுகுறித்து புகார் ஒன்றையும் தெரிவித்தது. இதையடுத்து கும்பலக்காடு போலீசார் பிக்பாஸ் வீட்டுக்கு நேரில் சென்று அந்த ஜெயில் டாஸ்க்கில் கலந்து கொண்ட பெண் போட்டியாளர்களிடம் விசாரணை நடத்தினர். அந்தப் போட்டியில் அவர்கள் சிறையில் அடைபட்டபோது என்னென்ன துன்பங்கள் நேர்ந்தது, என்னென்ன சிரமங்கள் ஏற்பட்டது என்பது குறித்து விரிவாக விசாரணை நடத்தியுள்ளனர்.
ஆனால் பெண் போட்டியாளர்கள் தங்களுக்கு இந்த டாஸ்க்கால் எந்த விதமான சிரமங்களும் ஏற்படவில்லை என்று போலீசாரிடம் விசாரணையில் கூறியதாக தெரிகிறது. போலீஸ் தரப்பில் இருந்து இந்த தகவல் வெளியான நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சி தரப்பிலிருந்து இதுகுறித்து எந்த விளக்கமும் இதுவரைக்கும் வரவில்லை. மேலும் இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் காதராஜ் என்ற கழுதையை வீட்டுக்குள் அனுப்பி அதை சிறப்பாக பரமாரிக்க வேண்டும் என போட்டியாளர்களுக்கு டாஸ்க் நடத்தினர். இதற்கு பீட்டா அமைப்பு எதிர்ப்பு தெரிவித்தது. நிகழ்ச்சி தொகுப்பாளர் நடிகர் சல்மான்கானுக்கும் பிக்பாஸ் நிர்வாகிகளுக்கும் சமீபத்தில் பீட்டா கடிதம் அனுப்பியதும் குறிப்பிடத்தக்கது.





