நடிகர் சரத்குமார், கடந்த 1990களில் முன்னணி நடிகராக ஹிட் படங்களை தந்தவர். சேரன் பாண்டியன், நாட்டாமை, சூரியவம்சம், அரசு, கம்பீரம், சமுத்திரம் போன்ற பல படங்கள் அவரது சினிமா கேரியரில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுத் தந்தன. முன்னணி நடிகராக இருந்த சரத்குமார் சுப்ரீம் ஸ்டார் என அழைக்கப்பட்டார். தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளராகவும் பதவி வகித்தார்.
இந்நிலையில் கடந்த 1996ம் ஆண்டில் சமத்துவ மக்கள் கட்சி என்ற அரசியல் கட்சியை சரத்குமார் துவக்கினார். நாடார் சமூகத்தை சேர்ந்த இவருக்கு துவக்கத்தில் தென்மாவட்ட மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனால் தேர்தலிலும் ஓரளவு கணிசமான ஓட்டுகளை பெற்றார். தென்காசி தொகுதி எம்எல்ஏவாகவும் இருந்தார்.
ஆனால் ஒரு கட்டத்துக்கு பிறகு சினிமா, அரசியல் என்ற இரண்டு துறைகளிலுமே சரத்குமார் புகழ் குறையத் துவங்கியது. சினிமாவில் முக்கியத்துவத்தை இழந்த சரத்குமார், தொடர்ந்து சில தோல்வி படங்களை தந்தார். அரசியலிலும் மாறி மாறி கூட்டணி சேர்ந்து, ஒரு கட்டத்தில் கட்சியின் முக்கிய மாநில நிர்வாகிகள், வேறு கட்சிகளுக்கு தாவி விட்டனர். அத்துடன், கட்சியும் பலமிழந்து போய் விட்டது.
அதன்பிறகு சட்டசபை தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் வரும்போது மட்டுமே கட்சிக்கொடி கட்டிய காரில், கட்சிக்கரை வேட்டி கட்டியபடி சரத்குமார் காணப்படுவார். தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் பேசுவார். கட்சி நிர்வாகிகளை சந்திப்பார். அரசியல்வாதியை போல பேசிக்கொண்டு இருப்பார். தேர்தல் முடிந்த பிறகு சினிமாவில் ஆர்வம் காட்டுவார் அல்லது வெளிநாடுகளுக்கு போய்விடுவார் என்பதுதான் அவரது அரசியல் வாழ்க்கையாக இருக்கிறது.
இந்நிலையில் அரசியல் கட்சி மேடைகளில் அவரது பேச்சு, சில நேரங்களில் வடிவேலு, கவுண்டமணி காமெடியை விட பலமடங்கு அதிகமாக இருக்கிறது. ஒருமுறை நான் 150 ஆண்டுகள் உயிர்வாழ்வேன் என்றார். அப்புறம், என் மாமியார் எப்போது மாப்பிள்ளை, நீங்க சிஎம் ஆகப் போறீங்க என கேட்டுவிட்டார். அதனால் 2026ல் நான்தான் முதலமைச்சர் என்று சிரிக்காமல் சொன்னார். பிறகு, பாஜகவில் இணைவது குறித்து நள்ளிரவு 2 மணிக்கு தூங்கிக்கொண்டு இருந்த ராதிகாவை எழுப்பி கேட்டிருக்கிறார்.
இப்போது, விருதுநகர் தொகுதியில் பாஜக கூட்டணியில், சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளராக சரத்குமார் மனைவி ராதிகா போட்டியிடுகிறார். இதுகுறித்து பேசிய நடிகர் சரத்குமார், சூரியவம்சம் படத்தில் தேவயானியை கலெக்டர் ஆக்கியதை போல, என் மனைவி ராதிகாவை ஜெயிக்க வைத்து விருதுநகர் எம்பி ஆக்குவேன் என்று பேசியிருக்கிறார். சினிமாவில் ஒரு கேரக்டரை கலெக்டர் ஆக்குவதற்கும், நிஜத்தில் தேர்தலில் மக்களிடம் ஓட்டு வாங்கி எம்பி ஆக்குவதற்கும் வித்யாசம் தெரியாமல் பேசிய சின்ராசு சரத்குமாரை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.





