தமிழக வெற்றி கழகம் கட்சியின் முதல் மாநாடு வரும் 27 ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்காக, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி சாலையை தேர்ந்தெடுத்திருக்கிறார் நடிகர் விஜய். மாநாட்டிற்கான ஏற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்கான பல்வேறு விஷயங்களை விஜய் செய்து வருகிறார்.
மாநாட்டுக்கான ஒருங்கிணைப்பு குழுவையும் அவர் ஏற்படுத்தி இருக்கிறார். முதலில் 27 குழுக்களை அவர் அறிவித்திருந்தார். பிறகு மூன்று குழுக்களையும் சேர்த்தார். இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருப்பதால் தவெக மாநாடு குறித்த பார்வை தமிழகம் எங்கும் திரும்பி இருக்கிறது.
அரசியல் கட்சி ஆரம்பித்ததில் இருந்து விஜய் எந்த ஒரு விஷயத்தையும் மிகப்பெரிய அளவில் பேசியதில்லை. பெரியதாக எந்த கட்சிக்கும் அவர் கண்டனம் தெரிவித்ததில்லை. ஒரே ஒருமுறை மட்டும் நீட் தேர்வுக்கு எதிராக அவர் குரல் கொடுத்திருந்தார்.
அது மட்டுமல்ல பெரியார் பிறந்த நாளன்று அவரது நினைவிடத்திற்கு சென்று மாலை அணிவித்து மரியாதை செய்தார். இந்த செயலே பலரது கவனத்தையும் ஈர்த்தது. இப்படியான சூழலில்தான் தமிழக வெற்றி கழக மாநாட்டை பலரும் எதிர்பார்த்து இருக்கிறார்கள். விஜய் என்ன பேச போகிறார் என ஒட்டுமொத்த தமிழகமும் காத்திருக்கிறது.
இப்படியான சூழலில் அவர் கட்சி மாநாடு குறித்து தொண்டர்களுக்கு இரண்டாவது முறையாக கடிதம் எழுதி இருக்கிறார். இதில் அவர் கூறியிருப்பதாவது, அரசியல் களத்தில் வாய்மொழியில் வித்தை காட்டுவது நமது வேலையல்ல. நம்மைப் பொறுத்தவரை, செயல் மொழி தான் நமது அரசியலுக்கான தாய் மொழி.
உற்சாகம் தவழும் உங்கள் முகங்களைக் காண போகும் அந்த தருணத்திற்காக, எனது மனம் தவம் செய்து காத்துக் கிடக்கிறது. இதனை நீங்களும் அறிவீர்கள் என்று எனக்கு நன்கு தெரியும். கர்ப்பிணிகள் பள்ளி சிறுவர் சிறுமியர்கள் முதியோர்கள் நீண்ட காலமாக நோயுற்று இருப்பவர்கள் பல தூரங்களைக் கடந்து வரும்போது உடல் ரீதியாக சிரமம் ஏற்படக்கூடும். இதனால் அவ்வளவு தூரம் சிரமப்பட்டு வர வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.





