நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழ்கிறார். இப்போது தளபதி 69 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துடன் தனது கலையுலக பயணத்துக்கு புல்ஸ்டாப் வைக்கும் விஜய், அடுத்ததாக தமிழக அரசியல் களத்தில் இறங்கி, முழுநேர அரசியல்வாதியாக மாற உள்ளார். 2026ம் ஆண்டில் நடக்க உள்ள சட்டசபை தேர்தலில் முதல்வர் நாற்காலிதான் என் இலக்கு என ஏற்கனவே அறிவித்தும் விட்டார்.
இதில் முக்கிய அடுத்த நகர்வாக வரும் ஞாயிறு அன்று விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள விசாலை என்ற கிராமத்தில் 160 ஏக்கர் பரப்பளவில் தவெக கட்சியின் முதல் அரசியல் மாநாடு நடக்கிறது. சுமார் 1.5 லட்சம் பேர் பங்கேற்க வாய்ப்புள்ளதாக கூறப்படும் இந்த மாநாடுக்கான ஏற்பாடுகளை டிவிகே கட்சியினர் வேகமாக செய்து வருகின்றனர். இந்த மாநாட்டில் நடிகர் விஜய் 2 மணி நேரம் பேச உள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை கொரட்டூரில் நடிகர் விஜய் தன் தாயார் ஷோபாவுக்காக சாய்பாபா கோவில் ஒன்றை கட்டியிருக்கிறார். அந்த கோவிலில் இன்று நடிகர் விஜயின் அரசியல் மாநாடு வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அக்கட்சி சார்ந்த முக்கிய நிர்வாகிகள் சார்பில், கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
டிவிகே கட்சியினர் சார்பில் நடத்தப்பட்ட அன்னதான நிகழ்ச்சியில் நடிகர் விஜயின் அப்பா, இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர் கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய எஸ்ஏ சந்திரசேகர் கூறியதாவது, வருகிற ஞாயிறு அன்று மாநாடு மிக சிறப்பாக நடக்கணும். தளபதிக்கு நல்ல பேர் கிடைக்கணும். ஒரு பெரிய நிலமைக்கு வரணும். தமிழ்நாடுக்கு பொக்கிஷம் கிடைக்கணும்.
விஜய் நடத்தும் அரசியல் மாநாடு சிறப்பாக நடக்க வேண்டும் என்று அந்த கட்சியை சேர்ந்த நிர்வாகிகள், இன்று கொரட்டூர் பாபா கோவிலில் அன்னதானம் வழங்கியுள்ளனர். அவர்களது அண்ணனுக்காக என்று எஸ்ஏசி சொல்ல சுற்றியிருந்தவர்கள் தளபதிக்காக, தளபதிக்காக என்க, சிரித்தபடி நீங்களே சொல்லுங்க என்று விலகி அங்கிருந்து நடக்க ஆரம்பித்தார்.
அப்போது வருகிற 2026ம் ஆண்டில் திராவிட கட்சி ஆட்சிகளுக்கு மாற்றாக டிவிகே கட்சி ஆட்சி அமைக்குமா, உங்களுக்கு கட்சியில் பதவி வழங்கப்படுமா என செய்தியாளர்கள் கேள்விகளை கேட்ட நிலையில், எதுவுமே சொல்லாமல் அங்கிருந்து எஸ்ஏசி வேகமாக நடந்து சென்றுவிட்டார். 2026ம் ஆண்டில் விஜய்தான் தமிழகத்தின் முதல்வர் என, அவரது அப்பாவே சொல்ல மறுக்கிறாரே என தவெக கட்சியினர் அப்செட்டில் உள்ளனர்.





