நடிகர் சூர்யாவுக்கு தற்போது கங்குவா திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி இருக்கிறது. வரும் 14ஆம் தேதி வெளியாகும் இந்த திரைப்படத்தின் பிரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. வெளி மாநிலங்களில் ப்ரோமோஷன் பணியில் பங்கேற்ற சூர்யா, அண்மையில் நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவிலும் கலந்து கொண்டார்.
இதனைத் தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் படத்தில் அவர் நடித்து முடித்திருக்கிறார். இது சூர்யாவின் 44-வது திரைப்படமாக உருவாகி இருக்கிறது. ஆக்சன் கலந்த காதல் திரைப்படமாக இது உருவாகியுள்ளது. இதற்குப் பிறகு அவர் ஆர்.ஜே பாலாஜி உடன் இணைந்து ஒரு படத்தின் நடிக்க இருக்கிறார்.
ஆன்மீகம் கலந்த ஃபேண்டஸி படமாக இது உருவாக இருப்பதாகவும் இதற்கு கருப்பு என டைட்டில் வைக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து அவர் பாலிவுட் உலகிற்கு பயணம் மேற்கொள்வதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
பிரம்மாண்டமான முறையில் உருவாக இருக்கும் கர்ணன் படத்தில் சூர்யா நடிப்பதாக திரைத்துறை வட்டாரத்தில் பேசப்படுகிறது. இப்படியான சூழலில், அண்மையில் சூர்யா அளித்த பேட்டியின் போது, அவரிடம் குடும்பத்துடன் மும்பையில் செட்டில் ஆகியதற்கான காரணம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு நடிகர் அளித்த பதில் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இது குறித்து பேசிய அவர், ஜோதிகா 18 ஆண்டுகளாக மும்பையிலேயே பிறந்து வளர்ந்தவர். அதன்பிறகு சென்னைக்கு வந்த அவர் 27 ஆண்டுகள் எனக்காகவே இங்கு இருந்திருக்கிறார். எல்லாத்தையும் தியாகம் செய்துவிட்டு எனக்காக இங்கு வந்தார். எப்படி ஒரு ஆணுக்கு தேவை இருக்குமோ அதே போல் பெண்ணுக்கும் தேவை இருக்கும். அதனால்தான் ஜோதிகா மற்றும் குழந்தைகளுடன் நான் மும்பையில் குடியேறி விட்டேன் என்று தெரிவித்துள்ளார்.
கோலிவுட் வட்டாரத்தில் மிகவும் பிரபலமான ஜோடி சூர்யா ஜோதிகா தான். இருவரும் காதலித்து பெற்றோர் சம்பந்தத்துடன் 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு தியா, தேவ் என இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். திருமணத்திற்குப் பிறகு, திரைப்படங்களில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களில் மட்டுமே ஜோதிகா நடித்து வருகிறார்.





