தமிழ் சினிமாவில் நடிகராக, இயக்குனராக ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் ஆர். பார்த்திபன். நேற்று அவரது இயக்கத்தில் டீன்ஸ் என்ற படம் ரிலீஸானது. ஒத்தச்செருப்பு, இரவின் நிழல் போன்ற வித்யாசமான படங்களை தந்து ரசிகர்களை அசத்தி வருகிறார் நடிகர் பார்த்திபன். எதிலும் வித்யாசத்தை பின்பற்றுபவராக நடிகர் பார்த்திபன் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குனர் கே பாக்யராஜிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து, அதன்பிறகு 1990களில் புதிய பாதை என்ற படம் மூலம் இயக்குனராக, ஹீரோவாக தமிழ் சினிமாவுக்குள் வந்தார் ஆர் பார்த்திபன். முதல் படமே மிகப்பெரிய வெற்றிப் படமாக அவருக்கு அமைந்தது. தொடர்ந்து பொண்டாட்டி தேவை. உள்ளே வெளியே, சுகமான சுமைகள், பாரதி கண்ணம்மா, வெற்றிக்கொடி கட்டு என பல படங்களில் நடித்து முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறினார்.
புதிய பாதை படத்தை பார்த்திபன் இயக்கி நடித்த போது, அவருக்கு அந்த படத்தில் ஜோடியாக சீதா நடித்தார். அந்த காலகட்டத்தில் முன்னணி நடிகையாக இருந்தவர் சீதா. எனினும் இந்த படத்தில் நடித்த போது பார்த்திபனுக்கும், சீதாவுக்கும் காதல் ஏற்பட்டு இருவரும் காதல் திருமணம் செய்துக்கொண்டனர்.
திருமணத்துக்கு பிறகு சீதா நடிக்கவில்லை. இரண்டு மகள்கள், ஒரு மகன் என குடும்பத்தை கவனித்துக்கொண்டார். தமிழ் சினிமா தம்பதி நட்சத்திரங்களில் சீதா – பார்த்திபனை குடும்ப ஒற்றுமைக்கு உதாரணமாக சொல்லப்பட்ட காலகட்டம் அது. ஆனால் திருமணமான 11 ஆண்டுகளில் திடீரென அவர்கள் இருவரும் மன வேறுபாடு காரணமாக பிரிவதாக அறிவித்தனர். விவாகரத்தும் செய்துவிட்டனர்.
அதன்பிறகு சீதா, சினிமாவில் நடிக்க போதிய வாய்ப்பு கிடைக்காமல் டிவி சீரியல்களில் அதிகமாக நடித்தார். அப்போது டிவி சீரியல் சதீஷ் என்பவரை காதல் திருமணம் செய்துக்கொண்டார். ஆனால் ஒரே ஆண்டில் அவரும் பிரிந்துவிட்டார். இப்போது சீதா, முரட்டு சிங்கிளாக இருந்து வருகிறார். அடிக்கடி வலைதளங்களில் ரீல்ஸ் போட்டு வருகிறார்.
இந்நிலையில், நடிகர் பார்த்திபன் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசுகையில், சினிமாவில் நிறைய நடிக்க வேண்டும் என்ற ஆசையில் சீதா இருந்திருக்கிறார். ஆனால் திருமணம் நடந்துவிட்டது, திருமணமான 11 ஆண்டுகளுக்கு பிறகு சீதா நடிக்க ஆசைப்பட்டார். நான் அதற்கு சம்மதிக்கவில்லை. குடும்பத்தில் விரிசல் வந்துவிடுமோ என்று நினைத்தேன். ஒருவேளை நான் சீதா நடிக்க ஓகே சொல்லி இருந்தால், இப்போது எங்களது வாழ்க்கை அழகாக இருந்திருக்கும். விவகாரத்து செய்யாமல், சமாளித்து வாழ்ந்துவிடலாம் என்றுதான் நினைத்தேன், ஆனால் முடியவில்லை, என்று பார்த்திபன் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.





