தமிழ் சினிமாவில் மிகவும் கவனிக்கத்தக்க முக்கிய படைப்பாளியாக இருப்பவர் இயக்குனர் வெற்றிமாறன். பொல்லாதவன் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான வெற்றிமாறன், இயக்குனர் பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராக தொழில் கற்றவர். எனினும் பொல்லாதவன் படத்தில் இவரது இயக்கம் பெரிய அளவில் ரசிகர்களால் வரவேற்பை பெற்றது.
அந்த படத்தில் கதாநாயகனாக நடித்த தனுஷூக்கும் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசுரன் உள்ளிட்ட படங்களை இயக்கினார். இந்த படங்கள் அனைத்துமே வெற்றிமாறன் இயக்கத்தில் மிகப்பெரிய வெற்றி படங்களாக அமைந்தன.
இதையடுத்து காமெடி நடிகர் சூரியை கதாநாயகனாக விடுதலை படத்தை வெற்றிமாறன் இயக்கினார். படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. பெருமாள் வாத்தியார் என்ற தீவிரவாதி கேரக்டரில் விஜய் சேதுபதியின் நடிப்பு வெகு சிறப்பாக இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த 2023ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி விடுதலை படம் வெளியான நிலையில், அடுத்த 6 மாதங்களுக்குள் விடுதலை 2ம் பாகம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் குறிப்பிட்ட கால அவகாசத்தில் விடுதலை 2 வெளியாகவில்லை. எனினும் 2023ம் ஆண்டில் டிசம்பர் மாத இறுதிக்குள் விடுதலை 2 படம் வெளியாகும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. வெற்றிமாறன் விடுதலை 2 படப்பிடிப்பை தொடர்ந்து நடத்தி வந்தாலும், மாதக்கணக்கில் இடைவெளி விட்டு படப்பிடிப்பை நடத்தினார். மாதக்கணக்கில் படத்தை எடுத்து விட்டு, அந்த காட்சிகள் தனக்கு பிடிக்கவில்லை என அவற்றை மொத்தமாக தூக்கி போட்டுவிட்டு மீண்டும் புதிதாக ஸ்கிரிப்ட் எழுதி எடுக்க ஆரம்பித்தார்.
அதனால் 2024 ஆண்டிலும் விடுதலை 2 படம் வெளியாவதில் தாமதம் நீடித்தது. தற்போது 2024ம் ஆண்டு துவங்கி 10 மாதங்கள் கடந்த நிலையில், இன்னும் விடுதலை 2ம் பாகம் படம் வெளியாகவில்லை .இந்த படத்தில் நாயகனாக நடித்த சூரி அதற்குப் பிறகு கருடன் மற்றும் கொட்டுக்காலி என்ற இரண்டு படங்களில் நடித்து முடித்துவிட்டு வேறு படங்களில் நடித்து வருகிறார். ஆனால் வெற்றிமாறன் இன்னும் விடுதலை 2 பாகத்தை ரிலீஸ் செய்யவில்லை.
வருகிற டிசம்பர் 20ம் தேதி விடுதலை 2 வெளியாகும் என்று அறிவித்த நிலையில், கடந்த வாரத்தில் டப்பிங் பணிகள் துவங்கியது. ஆனால் படத்தின் ரப் காப்பி பார்த்த இயக்குனர் வெற்றிமாறன் மீண்டும் ஒரு வாரம் படப்பிடிப்பு நடத்த வேண்டும் என்று கூறியிருக்கிறார். இது ஒரு வாரத்தில் முடியுமா இல்ல மாதக்கணக்கில் நீடிக்குமா, வருகிற டிசம்பர் 20ம் தேதி விடுதலை 2 ரிலீஸ் ஆகுமா என்று பலத்த குழப்பத்தில் ரசிகர்கள் இருக்கின்றனர்.





