பைக்கில் சாகசங்கள் செய்து மக்கள் மத்தியில் அதிக பிரபலமடைந்தவர் டிடிஎப் வாசன். இவர் பைக்கில் அதிகபட்ச வேகத்தில் பறப்பதும், சாகசங்கள் செய்வதும், மொபைல் போனில் பேசிய படியே பைக்கில் அதிகபட்ச வேகத்தில் செல்வதும், அதை வீடியோவாக எடுத்து தனது யூடியூப் சேனலில் பதிவிட்டும் இளைஞர்கள் மத்தியில் பெரிய அளவில் பிரபலமானவர்.
அதுதவிர பொது இடங்களில் தனது நண்பர்களுடன் சேர்ந்துக்கொண்டு கலாட்டா செய்து, அதையும் தனது வலைதள பக்கங்களில் பதிவிட்டு அதன் மூலமாகவும் மக்கள் மத்தியில் அதிகளவில் கவனத்தை ஈர்த்தவர். திருப்பதி கோவிலில், வரிசையில் காத்திருந்த பக்தர்களிடையே, கதவை திறப்பது போல் சென்று அவர்களை ஏமாற்றி பிராங்க் செய்த வீடியோவை சில மாதங்களுக்கு முன் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிக் கொண்டவர் டிடிஎப் வாசன்.
டிடிஎப் வாசன் ஹீரோவாக நடிக்கும் மஞ்சள் வீரன் என்ற படத்தை இயக்குவதாக படத்தின் இயக்குனர் செல்அம் அறிவித்திருந்தார். டிடிஎப் வாசன் நடிக்கும் மஞ்சள் வீரன் படம் குறித்த எதிர்பார்ப்பும் மக்கள் மத்தியில் அதிகரித்தது. மஞ்சள் வீரன் படப்பிடிப்பு துவங்கி நடந்து வந்தது.
ஆனால் கடந்த வாரத்தில் திடீரென செய்தியாளர்களை சந்தித்த படத்தின் இயக்குனர் செல்அம், மஞ்சள் வீரன் படத்தில் இருந்து டிடிஎப் வாசன் நீக்கப்படுகிறார். இந்த படத்தில் அவர் ஹீரோவாக நடிக்கவில்லை. அவருக்கு பதிலாக வேறு ஒருவர் ஹீரோவாக நடிப்பார். அதுகுறித்த அறிவிப்பை விரைவில் வெளியிடுகிறேன் என்று அவர் கூறியிருந்தார்.
இதுகுறித்து டிடிஎப் வாசன் வெளியிட்டிருந்த வீடியோவில், டைரக்டர் செல்அம் இப்படி செய்வார் என்று நினைக்கவில்லை. அண்ணா அண்ணா என்று நான் சொன்னதுக்கு என்னை ஏமாற்றி விட்டார். என்னை வைத்து மலிவான விளம்பரம் தேடிக்கொண்டார். இது ஒரு பச்சை துரோகம். இந்த படத்தில் நான் நீக்கப்படுவது குறித்து என்னிடம் அவர் பேசவே இல்லை. சொல்லியிருந்தால் நானே இந்த படத்தில் இருந்து விலகி இருப்பேன். நான் அவருக்கு பலமுறை போன் செய்தும் அது போனை அவர் எடுக்கவே இல்லை என்று மிகவும் வருத்தப்பட்டு பேசியிருந்தார்.
இந்நிலையில் தற்போது மஞ்சள் வீரன் படத்தில் கதாநாயகனாக நடிகர் கூல் சுரேஷ் நடிக்கிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது. இப்போது அவர்தான் இந்த படத்தின் ஹீரோ என்று டைரக்டர் செல்அம் கூறியதாக தகவல் வெளியாகி வருகிறது. கூல் சுரேஷ் ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர். பல படங்களில் காமெடி ரோலில் நடித்திருக்கிறார். இவர் மஞ்சள் வீரன் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார், அதுவும் டிடிஎப் வாசன் நடிக்க வேண்டிய கேரக்டரில் நடிக்கிறார் என்பதும் ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.





