லோகேஷ் கனகராஜ் தற்போது ரஜினியை வைத்து கூலி என்னும் திரைப்படத்தை இயக்கி வருகிறார். சத்யராஜ், நாகர்ஜுனா, சோபின் சபீர், ஸ்ருதிஹாசன், உபேந்திரா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். தங்க கடத்தலை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டு வருகிறது. அனிருத் இசையமைக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இதன் சூட்டிங்கை முதலில் ஹைதராபாத்தில் நடத்தினார் லோகேஷ் கனகராஜ். பிறகு விசாகப்பட்டினம் துறைமுகம் அருகே ஷெட் போடப்பட்டு பணிகள் நடைபெற்றன. இந்த படத்தில் ரஜினிக்கு நெகட்டிவ் கதாபாத்திரம் என்று கூறப்படுகிறது.
அதேசமயம் இது எல்சி யூ வில் வராது என்று இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெளிவு படுத்திவிட்டார். இதன்பிறகு அவர் கைதி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க இருக்கிறார். இதற்கான சூட்டிங் 2025 ஆம் ஆண்டு தொடங்குகிறது. இதில் கார்த்தி மற்றும் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் சூர்யா இருவரும் இணைந்து நடிப்பதாக தெரிகிறது.
இதன் நடுவே எல் சி யு குறித்து பத்து நிமிட குறும்படத்தை இயக்கி இருக்கிறார் லோகேஷ் கனகராஜ். அந்தக் குறும்படத்தில், எல்சியு உருவாக காரணம் என்ன என்பது விவரிக்கப்பட்டு இருக்கிறதாம். இதில் நரேன், ஜெயராம் மகன் காளி தாஸ் உள்ளிட்டோர் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த குறும்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அண்மையில் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டு இருந்தார்.
இந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில், ராகவா லாரன்ஸ் எல் சி யூ வில் இணைந்திருப்பதாக அறிவித்திருக்கிறார். ஏற்கனவே விக்ரம் திரைப்படத்தில் விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் முதலில் ராகவா லாரன்ஸை நடிக்க வைக்க தான் லோகேஷ் திட்டமிட்டு இருந்தார். ஆனால் அது நிறைவேறாமல் போனது. இந்த நிலையில் ராகவா லாரன்ஸை வைத்து பென்ஸ் என்னும் திரைப்படத்தை லோகேஷ் தயாரித்து வருகிறார்.
ரெமோ மற்றும் சுல்தான் ஆகிய படங்களை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் இந்த படத்தை எடுத்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் கதையில் ஆக்சன் படமாக இது உருவாகிறது. இந்த நிலையில் ராகவா லாரன்ஸ் பிறந்த நாளை முன்னிட்டு இந்த படத்திற்கான வீடியோவை வெளியிட்டு இருக்கும் லோகேஷ் கனகராஜ், இது எல் சி யு வில் இருப்பதாக தெரிவித்திருக்கிறார். இதனால் படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.





