தமிழ் சினிமாவில் 30 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வருகிறார் நடிகர் விஜய். இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் மகன் என்று அடையாளத்துடன் தமிழ் சினிமாவுக்குள் நுழைந்த விஜய், அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்து முன்னணி நடிகராக பிரபலமடைந்தார். தற்போது அவர் தனது 69வது படத்தில் நடித்து வருகிறார்.
பல படங்களில் விஜயுடன் நடித்த சக நடிகர்கள், நடிகைகள் பலரும் நேர்காணலில் கூறும் போது, நடிகர் விஜய் ஷூட்டிங் ஸ்பாட்டில் எப்போதும் அமைதியாக இருப்பார். யாரிடமும் அதிகமாக பேச மாட்டார். ஆனால் கேமரா முன் நின்றவுடன் அவரது மொத்த பொசிஷனும் மாறிவிடும். கதாபாத்திரத்தை அப்படியே கண்முன் கொண்டு வந்து ஆவேசமாகவும் அழுகையாகவும் வீரமாகவும் கதைக்கேற்ப சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துவார்.
அதன் பிறகு கேமராவை விட்டு விலகியுடன் சாதாரணமாக மிக அமைதியாக சென்று அமர்ந்து கொள்வார் என்று பலமுறை கூறியிருக்கின்றனர். அதேபோல் நடன காட்சிகளிலும் மிக அமைதியாக இருக்கும் விஜய், கேமரா முன் வந்து நின்று விட்டால் டான்ஸ் மாஸ்டர்களே அசந்து போகும் அளவுக்கு சிறப்பான நடன அசைவுகளை வெளிப்படுத்தி அற்புதமாக நடனம் ஆடுவார் என்றும் அவர்கள் கூறி இருக்கின்றனர்.
அது போன்ற ஒரு நிலையில் தான் இப்போது தமிழக மக்களின் மனநிலையும் இருக்கிறது. கடந்த ஞாயிறு அன்று தவெக கட்சியின் முதல் அரசியல் மாநாடு விக்கிரவாண்டியில் உள்ள விசாலை கிராமத்தில் நடந்தது. இதுவரை அமைதியின் உருவமாக காணப்பட்ட நடிகர் விஜய், இந்த மாநாட்டில் 48 நிமிடங்கள் பேசியது பலருக்கும் இது விஜய் தானா என்று ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. பேசினார் என்பதை விட இன்றைய அரசியலை பொளந்து கட்டினார் என்பதே சரியான வார்த்தையாக இருக்கும்.
அந்த அளவுக்கு விஜயின் ஆவேசமான, அர்த்தம் நிறைந்த அற்புதமான பேச்சு பலரையும் அசத்தியிருக்கிறது. விஜய் ரசிகர்கள் தளபதியின் இந்த பேச்சைக் கேட்டு கொண்டாட்டமடைந்தனர். மாநாட்டில் உற்சாக ஆரவாரம் செய்தனர். இப்போது விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி அஜீத்குமார் மற்றும் ரஜினிகாந்த் ரசிகர்கள் மத்தியிலும் விஜயின் அரசியல் மாநாட்டுக்கு மாபெரும் பாராட்டுக்களும் ஆதரவும் கிடைத்து வருகிறது. பலரும் தங்களது வலைதள பக்கங்களில் விஜய்க்கு ஆதரவான கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
பல ஆண்டுகளாக ரஜினி ரசிகர்கள், ரஜினி அரசியலுக்கு வருவார் என்று ஆவலாக எதிர்பார்த்த நிலையில் கடைசி வரை வராமல் ரசிகர்களை டபாய்த்து விட்டார். அதேபோல் அஜீத் குமார் அரசியலுக்கு வரவேண்டும் என அவரது ரசிகர்கள் விரும்பினாலும், அவர் கார் ரேஸ் பைக் ரேஸ் என்று அதில்தான் ஆர்வமாக இருக்கிறார். அதனால் விஜயின் அரசியல் வருகை, அவரது ஆர்வம், அவர் காட்டுகிற ஆவேசமும், மாநாட்டில் அவரது தைரியமான பேச்சும் துணிச்சலான வார்த்தைகளும், அஜீத்குமார், ரஜினி ரசிகர்கள் மத்தியில் ஒரு மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த மன மாற்றம் நிச்சயமாக 2026 ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் விஜய்க்கு ஆதரவான ஓட்டுகளாக மாறும் என்ற தகவல் வைரலாகி வருகிறது.





