சினிமா என்றாலே, அதில் அதிரடி சண்டை காட்சிகள் என்பது தவிர்க்க முடியாததாக இருக்கிறது. நூற்றுக்கணக்கான கோடிகளில் சம்பளம் வாங்கும் ஹீரோக்கள் நடிப்பதாக காட்டப்படும் பல அதிரடி சண்டை காட்சிகளில், உயிருக்கு ஆபத்தான ஸ்டண்ட் காட்சிகளில் நடிப்பது சில ஆயிரங்கள் சம்பளமாக வாங்கும் டூப் நடிகர்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
அதாவது உயிரை பணயம் வைத்து, டூப் ஆக நடிப்பது ஸ்டண்ட் நடிகர்களாக இருந்தாலும், அப்படிப்பட்ட ஆபத்தான காட்சிகளில் உயிரை பணயம் வைத்து நடிக்கும் அந்த டூப் நடிகர்கள்தான் உண்மையான ஹீரோக்கள். டூப்புகளை நடிக்க வைத்துவிட்டு, அவர்களது நடிப்பால் கைதட்டல் வாங்கும் ஹீரோக்கள்தான் உண்மையில் டூப் நடிகர்கள் என்று பலரும் வேடிக்கையாக விமர்சிப்பது உண்டு.
தமிழ் சினிமாவில் இதுபோன்ற ஆபத்தான காட்சிகளில் நடிக்கும்போது தவறுதலாக விபத்துகள் நடப்பதுண்டு. அப்படிப்பட்ட விபத்துகளில் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. குறிப்பாக விடுதலை படத்தில் நடித்த போது, படப்பிடிப்பு தளத்தில் கயிறு அறுந்து விழுந்து ஒரு ஸ்டண்ட் கலைஞர் உயிரிழந்தார்.
சில தினங்களுக்கு முன் கார்த்தி நடிப்பில் உருவாகும் சர்தார் படத்தின் 2ம் பாகம் படப்பிடிப்பு நடந்தது. இந்த படத்தின் பிரமோவுக்காக சில காட்சிகள் படம்பிடிக்கப்பட்ட போது, ஏழுமலை என்ற ஸ்டண்ட் கலைஞர் உயரத்தில் நின்றிருந்த போது கால் இடறி தவறி விழுந்து பலத்த காயமடைந்து உயிரிழந்தார். உரிய பாதுகாப்பு கவசங்களின்றி இப்படி ஆபத்தான காட்சிகளில் நடிக்கும் போது திரைக்கலைஞர்கள் உயிரிழக்கின்றனர்.
தமிழ் சினிமாவில் இப்படி ஸ்டண்ட் கலைஞர்கள் விபத்துகளில் உயிரிழப்பு தொடர்கதையாக இருப்பதால், இதற்கு முக்கிய முடிவெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. தென்னிந்திய தொழிலாளர்கள் சம்மேளனம் அமைப்பு, நாளை மறுதினம் ( 25ம் தேதி) சென்னையில் நடக்கும் அனைத்து விதமான படப்பிடிப்புகளையும் ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.
படப்பிடிப்பு தளங்களில் முறையான பாதுகாப்பு உபகரணங்கள், ஆம்புலன்ஸ் வாகனங்களை நிறுத்திவிட்டுதன் படப்பிடிப்பை நடத்த வேண்டும் என்கிற வகையில் விழிப்புணர்வு கூட்டத்தை கமலா தியேட்டரில் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏனெனில் எவ்வித பாதுகாப்பும், முறையான ரிகர்சலும் இல்லாமல் இதுபோன்ற சண்டை காட்சிகளை படம்பிடிக்கும்போது அசம்பாவிதங்கள் நடந்து விடுகின்றன. இதை தவிர்ப்பது, நடந்தால் என்ன செய்வது என்பது குறித்தும் இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.





